பாபநாசத்தில் ஆயிரக்கணக்கானோர் நீராடல்

தாமிரவருணி மஹா புஷ்கரம் நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான சனிக்கிழமை அதிகாலை முதல் பாபநாசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.

தாமிரவருணி மஹா புஷ்கரம் நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான சனிக்கிழமை அதிகாலை முதல் பாபநாசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
மஹா புஷ்கரம் நிகழ்ச்சியை முன்னிட்டு பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரவருணி நதியில் மூன்றாவது நாளாக புனித நீராடல் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
இதையடுத்து அனைத்து இடங்களிலும் அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். பாபநாசம் பாபநாசநாதர் கோயில் படித்துறையில் அதிகாலை 4.30 மணியிலிருந்து தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிலிருந்தும் குடும்பத்துடன் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர். சனிக்கிழமை விடுமுறை நாளானதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதையடுத்து வாகனங்கள் டாணா பகுதியுடன் திருப்பி அனுப்பப்பட்டன. காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஜாஹீர்ஹூசைன், சங்கர் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் நீராடும் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பில் நடைபெறும் புஷ்கரம் விழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக மகாசித்தர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சித்த மருத்துவர்கள், யோகா, தியானப் பயிற்சி மைய நிர்வாகிகள், சித்தர் வழிபாட்டு மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலையில் பாபநாசம் கோயில் படித்துறை, சித்தர்கள் கோட்டம், அம்பாசமுத்திரம் காசிநாதர் கோயில் படித்துறை, கல்லிடைக்குறிச்சி தாமிரபரணீஸ்வரர் கோயில் படித்துறை, திருப்புடைமருதூர், முக்கூடல், சேரன்மகாதேவி உள்ளிட்ட படித்துறைகளில் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும், அகில பாரதிய துறவிகள் சங்கம் சார்பில் நான்கு நாள் வேத பாராயணம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் செங்கோட்டை பாரதிய தீர்த்த வேத பாடசாலை மாணவர்கள் ரிக்,, சாம, அதர்வண, யஜூர் ஆகிய நான்கு வேதங்களை வேதபாடசாலை வாத்தியார் ராகவன் தலைமையில் பாராயணம் செய்தனர். பாடசாலை நிர்வாகி ராமச்சந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com