உலக நாகரிகத்தின் தொடக்கம் பொருநை நதிக்கரை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

உலக நாகரிகத்தின் தொடக்கம் பொருநை நதிக்கரை என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். 

உலக நாகரிகத்தின் தொடக்கம் பொருநை நதிக்கரை என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். 
திருநெல்வேலி குறுக்குத்துறையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தாமிரவருணி மஹா புஷ்கர ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற தாமிரவருணி மஹா ஆரத்தி விழாவில் பங்கேற்ற அவர் பேசியது: 
உலகத்தின் முதல் இனம் தமிழினம். அந்தத் தமிழ் இனம் தோன்றிய இடம் இந்தப் பொருநை நதிக்கரைதான் என்பதை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்தியிருக்கிறது.  
அகத்திய மாமுனிவர் ஏற்றி வைத்த விளக்குத்தான் தமிழ் என்கிற அமுதினும் இனிய மொழி. அந்த மொழி பொருநை நதிக்கரையில்தான் தோன்றியது.  தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய தமிழறிஞர்கள் எல்லாம் தாமிரவருணி தண்ணீர் குடித்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். பாரதி, வ.உ.சி.,  வாஞ்சிநாதன் என்று எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் பொருநை நதிக்கரையோரம் பிறந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. 
இங்கிருந்து பிறந்த நாகரிகம் உலகின் முதல் நாகரிகம் என்பதனை தாமிரம் என்ற பெயர் இந்த நதிக்கு சூட்டப்பட்டதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். ஆதிமனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம் தாமிரம்தான். அந்தத் தாமிரத்தின் பெயரில் ஒரு நதியே அமைந்திருக்கிறது, ஒரு ஊரே அமைந்திருக்கிறது என்றால், இங்குதான் ஆதிமனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்பதை அகழ்வாராய்ச்சிகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இங்கிருந்துதான் தாமிரம் தோன்றியது என்பதற்காகவும், தாமிரம் கண்டறியப்பட்ட இடம் என்பதாலும் பஞ்ச சபைகளில் இது தாமிர சபையாகிறது. அதனால்தான் மனித இனத்தின் முதல் நாகரிகம் தோன்றிய இடம் பொருநை நதிக்கரை. 
நதியை ஆராதிக்க வேண்டும். உலகின் ஜீவன் என்பது தண்ணீர்தான். இந்திய சமுதாயம்தான் நதிகளை தெய்வமாக்கிக் கொண்டாடுகிறது. உலகில் எத்தனையோ பெரிய நதிகள் இருக்கின்றன. ஆனால்,  எந்தவொரு நாட்டிலும் நதியை தெய்வாமாக்கிக் கொண்டாடியதில்லை. நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். கங்கா, யமுனா, காவிரி என நதியின் பெயர்களை பெண் குழந்தைகளுக்குச் சூட்டி நதிகளைக் கொண்டாடுகிறோம். தாயாக வணங்குகிறோம்.
நதியைக் கொண்டாடும் வரை அந்த நதி இருக்கும். புஷ்கர விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருக்கிறார்கள். இப்போது எல்லோருக்கும் பொருநை நதியின் மகிமை என்னவென்று தெரிகிறது. இதுபோல நதிகளை கொண்டாடும்போதுதான் அந்த நதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும்.
நதியைக் கொண்டாடுங்கள். நதியைக் கொண்டாடும்போதுதான் நாம் வாழ முடியும். நதிகளும் வாழ முடியும். பொருநை நதி போற்றி வணங்கி காப்பாற்றப்பட வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com