மக்கள் வெள்ளத்தில் குலுங்கிய நெல்லை!

தாமிரவருணி புஷ்கர விழாவில் புனித நீராட ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் திருநெல்வேலி மாநகரம் மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது.

தாமிரவருணி புஷ்கர விழாவில் புனித நீராட ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் திருநெல்வேலி மாநகரம் மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது.
தாமிரவருணி மஹா புஷ்கர விழா கடந்த 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பாயும் தாமிரவருணி நதியில் தினந்தோறும் ஏராளமான மக்கள் புனித நீராடி வருகின்றனர். ஆயுத பூஜை விடுமுறையைத் தொடர்ந்து கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் புனித நீராட மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் திருநெல்வேலி நகரமே ஸ்தம்பித்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணி முதலே புனித நீராடுவதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கார்களிலும், தனி பேருந்துகளிலும் வரத் தொடங்கினர். காலையில் திருநெல்வேலியை அடைந்த விரைவு ரயில்கள், மதுரை, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட பயணிகள் ரயில்களில் ஏராளமானோர் வந்தனர். இதனால் அதிகாலை முதலே போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது திருநெல்வேலி மாநகரம்.
போக்குவரத்து ஸ்தம்பித்தது: திருநெல்வேலி நகரம் அலங்கார வளைவு பகுதி, குறுக்குத்துறை விலக்கு, திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை பகுதி ஆகியவற்றில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. கைலாசபுரத்தில் இருந்து சி.என்.கிராமம் வழியாக குறுக்குத்துறை செல்லும் சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருவனந்தபுரம் சாலை, லங்கர்கானா தெரு, மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை சாலை ஆகியவற்றில் வாகனங்கள் நெரிசல் காரணமாக ஊர்ந்து சென்றன.
குறுக்குத்துறையில் திருநெல்வேலி நகரம் செல்லும் சாலை, அருணகிரி திரையரங்கில் இருந்து கணேஷ் திரையரங்கம் செல்லும் சாலை, திருநெல்வேலி காட்சி மண்டபத்தில் இருந்து சந்திப் பிள்ளையார் கோயில் செல்லும் சாலை, வழுக்கோடையில் இருந்து திருநெல்வேலி நகரம் அலங்கார வளைவு வரையிலான சாலை, திருநெல்வேலி நகரத்தில் உள்ள வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, மேல ரதவீதி என அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. இதனால் திருநெல்வேலி மாநகரப் பகுதியை கடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போதிய போலீஸார் இல்லாததால் பணியில் இருந்த காவலர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.  
தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து திருநெல்வேலி தொண்டர் சன்னதி கோயில் அருகில் இருந்து தச்சநல்லூர் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இதனால் பாபநாசம், குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்த வெளியூர் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பொருள்காட்சித் திடல், மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மக்களும் திருநெல்வேலிக்கு வந்து, இங்கிருந்து பாபநாசம், முறப்பநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் ஜடாயு தீர்த்தம் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், திருநெல்வேலி-தூத்துக்குடி நான்குவழிச் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
சாலை வசதி போதாது: இதுகுறித்து சி.என்.கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறியது: திருநெல்வேலியில் குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, தைப்பூசமண்டப படித்துறையில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் குளித்துச் செல்கிறார்கள். ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோக்களில் பக்தர்கள் அதிகம் செல்கிறார்கள். ஆனால், குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிக்காக குறுக்குத்துறை முதல் மீனாட்சிபுரம் வரையிலான சாலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தைப்பூச மண்டபத்தின் எதிர்பகுதியில் உள்ள கொக்கிரகுளம் கரை, அருகன்குளம் சாலை உள்ளிட்டவற்றில் போதிய மின்விளக்கு வசதியில்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அதனை உடனடியாக செய்து கொடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

கழிப்பறை வசதியின்றி தவித்த மக்கள்
தாமிரவருணி மஹா புஷ்கரத்தையொட்டி நீராட வந்த பக்தர்களுக்கு போதிய கழிப்பறை வசதியில்லாததால் மிகவும் அவதிக்குள்ளாயினர். ரயில் நிலையம் அருகே மாநகராட்சி சார்பில் த.மு. சாலை, பழைய பேருந்து நிலைய வளாகங்களில் கட்டண கழிப்பறைகள் செயல்பட்டாலும், சில கழிப்பறைகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதிகாலை முதல் முற்பகல் வரை ரயில் நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில்  கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண்கள், முதியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com