காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாளையங்கோட்டையில்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாளையங்கோட்டையில் அரசு மருந்தாளுநர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் ஒய். ஸ்டார்வின் தலைமை வகித்தார். மருந்து கிடங்கு அலுவலர் வனஜா, தலைமை மருந்தாளுநர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகள் குறித்து அமைப்பின் மாவட்டச் செயலர் ஏ. ஆனந்தகுமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் வீ. பார்த்தசாரதி தொடங்கி வைத்தார். மாவட்ட இணைச் செயலர் ஏ. அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 350-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; பள்ளி சிறார்கள் திட்டத்தில் 770 மருந்தாளுநர் பணியிடங்களை சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மூலம் நிரப்ப வேண்டும்; 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பா ளர் பணியிடம் உருவாக்க வேண்டும்; தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின்கீழ் இயங்கும் 32 மாவட்ட மருந்து கிடங்குகளில் மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும்; நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி செய்யும் மருந்தாளுநர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும்; தலைமை மருந்தாளுநர், மருந்து கிடங்கு அலுவலர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்; நடமாடும் மருத்துவக் குழு, துணை சுகாதார மையங்களில் தொற்றா நோய் மருந்துகள் வழங்கிட மருந்தியல் சட்டப்படி மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும்; 24 மணி நேரமும் இயங்கும் தாலுகா மருத்துவமனைகள், நெடுஞ்சாலையிலுள்ள மருத்துவமனைகளில் கூடுதலான மருந்தாளுநர்கள் நியமனம் செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com