தீபாவளி பண்டிகை: பட்டாசு கடைக்கு விண்ணப்பிப்போருக்கான விதிமுறைகள்: ஆட்சியர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையின்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பிப்போர்

தீபாவளி பண்டிகையின்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பிப்போர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருவாய்த் துறை மானிய கோரிக்கையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிகர்கள் வெடிபொருள் சட்ட விதிகளின்படி பட்டாசுகளை சில்லறை விற்பனை செய்ய ஆன்-லைன் மூலம் ஒரு மாதத்துக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 
ஆனால் பட்டாசு சில்லறை விற்பனை செய்ய ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதை தமிழ்நாடு மின் ஆளுமை திட்டத்துடன் இணைந்து செயல்படுத்த காலஅவகாசம் தேவைப்படுவதால், தீபாவளி பண்டிகையின்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி இடங்களை தவிர்த்து,  தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். அவர்கள் அனைவரும் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 
வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் படிவம் ஏஇ-5இல் விண்ணப்பத்தின் ஐந்து நகல்களை பூர்த்தி செய்து,  ரூ. 2-க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்ட வேண்டும். உரிமக் கட்டணமாக ரூ.500 அரசு கருவூலத்தில் செலுத்த வேண்டும். 
கடையின் வரைபடம்,  புகைப்படம் 2,  வீட்டு வரி ரசீது,  வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் அதன் வீட்டு வரி ரசீது நகல்,  சொந்தக் கட்டடம் எனில் வீட்டு வரி ரசீது நகல், திருநெல்வேலி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் தடையில்லா சான்று ஆகியவற்றுடன் வரும் 28ஆம் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 28ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
உரிமம் வழங்கிட கேட்டு விண்ணப்பம் செய்வோர் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பான இடமாகவும் தேர்வு செய்ய வேண்டும்.  ஆட்சேபம் இல்லாத இடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு உரிமம் பெற்றவர்கள், அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பித்தால், ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com