நெல்லை மாவட்டத்தில்  66 இடங்களில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர்  வி.எம்.ராஜலட்சுமி

திருநெல்வேலி மாவட்டத்தில் 66 இடங்களில் 3,630 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுவதாக

திருநெல்வேலி மாவட்டத்தில் 66 இடங்களில் 3,630 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்தார். 
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பங்கேற்று, சேலை, வளையல் உள்ளிட்ட சீதனப் பொருள்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கி பேசியது: குழந்தைகள் ஆரோக்கியமாக பிறப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்,  குழந்தைகள் பிறந்த பின்பு தாய்ப்பாலின் மகத்துவம்,  குழந்தைகளுக்கு உணவூட்டும் முறை,  தடுப்பூசி போடும் முறை,  குழந்தைகள் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஏழை கர்ப்பிணிகளின் மனதில் சீமந்த விழா நடத்த குடும்பத்தில் நிதி இல்லையே என்ற எண்ணம் ஏற்படாமல் இருப்பதற்காகவும் சமுதாய வளைகாப்பை நடத்தி, பல்வேறு சீதனங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 66 இடங்களில் 3,630 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. விழாவில், கலந்துகொள்ளும் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால பராமரிப்பு பற்றிய கையேடு வழங்கப்படுகிறது. இதில் உள்ள விவரங்களை அறிந்து சத்தான உணவுகளை உள்கொண்டு, ஆரோக்கியமான குழந்தைகளை பெற வேண்டும். 
திருநெல்வேலி மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு  வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடையை கண்காணிக்க செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அந்தந்த அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது. 
எனவே, பொதுமக்கள் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று தங்களது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் போதிய உயரம் மற்றும் எடையுடன் இருக்கிறார்களா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார். 
விழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திருநெல்வேலி கோட்டாட்சியர் இல.மைதிலி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட  அலுவலர் செ.ஜெயசூர்யா, அதிமுக மாவட்டச் செயலர் தச்சை கணேசராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com