பராமரிப்பின்றி பாழாகும் தாமிரவருணி கரையோர கல்மண்டபங்கள்!

போதிய பராமரிப்பு இல்லாததால் தாமிரவருணி கரையோரத்தில் உள்ள பழங்கால கல்மண்டபங்களும், அதில் உள்ள

போதிய பராமரிப்பு இல்லாததால் தாமிரவருணி கரையோரத்தில் உள்ள பழங்கால கல்மண்டபங்களும், அதில் உள்ள சிற்பங்களும் பாழாகி வருகின்றன. மகா புஷ்கர விழாவையொட்டி இவற்றை சீரமைக்க முயற்சிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரவருணி பொதிகைமலையில் தோன்றி புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. அகஸ்தியர் அருவி, சின்னசங்கரன்கோவில், திருப்புடைமருதூர் கோயில் பழங்கால ஓவியங்கள், குறுக்குத்துறை முருகன் கோயில், அருகன்குளம் ஜடாயுதீர்த்தம் உள்பட ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கோயில்களும், இயற்கையின் அழகு ததும்பும் இடங்களும் தாமிரவருணி கரையோரம் அதிகம். 
பாண்டியர் காலங்களில் கட்டப்பட்ட ஏராளமான கல்மண்டபங்கள் இங்கு உள்ளன. யாளி, குதிரை, மான், யானை, விநாயகர், நாகம், அகல்விளக்கு ஏந்தும் பெண் உள்ளிட்ட வியக்கவைக்கும் சிற்பங்கள் இம் மண்டபங்களில் இடம்பெற்றுள்ளன. வெள்ள காலங்களில் தண்ணீர் எளிதாக மண்டபத்திற்குள் வந்து செல்லவும், துணிகள் துவைக்கவும், வழிபாடுகள் நடத்தவும் ஏதுவாக கட்டடக் கலை நுட்பங்களுடன் பல மண்டபங்கள் உள்ளன. கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி குறுக்குத்துறை, ஆழ்வார்திருநகரியில் உள்ள ஒரு மண்டபத்தின் உச்சியில் சங்கு பொருத்தப்பட்டுள்ளது. அதாவது வெள்ள காலங்களில் தண்ணீர் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு சங்கின் அருகே நீர் வரும்போது உருவாகும் காற்றலைகளால் சங்கு ஒலிக்கத் தொடங்கும். நீரில் மூழ்கினால் சங்கு ஒலி நிற்கும். இதை வைத்து கரையோர மக்கள் வெளியேற வேண்டும். அதேபோல மீண்டும் சங்கு ஒலி கேட்ட பின்பு தண்ணீர் குறைகிறது என்பதை புரிந்து வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு, கருப்புக்கட்டி, கடுக்காய் உள்ளிட்டவற்றைக் கொண்டு கட்டப்பட்ட பெரும்பாலான கல்மண்டபங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தும் இளம்தலைமுறையினருக்கு பிரமிப்பை உருவாக்கும் வகையில் உள்ளன.
வெளிநாடுகளில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பகுதிகளையே போற்றிப் பாதுகாத்து சுற்றுலாத்தலமாக பேணிக்காக்கும் நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலைநயம் மிக்க மண்டபங்கள் மது பிரியர்களின் கூடாரமாகவும், சோம்பேறிகளின் வசிப்பிடமாகவும் மாறியிருப்பது வருந்தத்தக்கது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். பல லட்சம் பேர் புனித நீராட வர உள்ள மகா புஷ்கர விழாவையொட்டி கல்மண்டபங்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டியது அவசியம். உழவாரப் பணிக்குழு, நாட்டுநலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை உள்ளிட்ட மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களைக் கொண்டு தற்காலிக சீரமைப்பு பணிகளை முழுவீச்சில் செய்ய மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்றாண்டில் முழுமை: இதுதொடர்பாக அகில பாரத துறவிகள் சங்கத்தின் செயலர் ராமானந்த சுவாமி கூறியது: 144 ஆண்டுகளுக்கு பின்பு தாமிரவருணியில் மகாபுஷ்கரம் நடைபெற உள்ள நிலையில், இந்த நதி மீதான தேசிய கவனத்தை ஈர்க்க முயற்சிக்க வேண்டும். புஷ்கர விழாவையொட்டி படித்துறைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், குறுக்குத்துறை, கொக்கிரகுளம், அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட 19 படித்துறைகளில் ஆயிரக்கணக்கானோர் திரள வாய்ப்புள்ளது. ஆந்திரம், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் பங்கேற்க உள்ளனர். அதற்கேற்ப படித்துறைகளை மேம்படுத்த வேண்டும். கால அவகாசம் மிகவும் குறைவாக உள்ளதால் படித்துறைகளில் பாதுகாப்புக்குத் தேவையான முன்னேற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும்.
தாமிரவருணி புஷ்கர விழா முடிந்த பின்பு எங்களது ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அரசு அங்கீகாரம் அளித்து பக்தர்கள் மற்றும் தனியார் பங்களிப்புக்கு வாய்ப்பளித்தால் நதிக்கரையில் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை கரையோரம் உள்ள கல் மண்டபங்கள் அனைத்தையும் மூன்றாண்டுகளில் முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com