தீபாவளி: கோ ஆப்டெக்ஸ் நெல்லை மண்டல விற்பனை இலக்கு ரூ. 18.40 கோடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ரூ. 18.40 கோடிக்கு துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ரூ. 18.40 கோடிக்கு துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் கைத்தறி துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காந்திமதி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெ. நாச்சியார் பெற்றுக் கொண்டார். இதில், கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் க. இசக்கிமுத்து, திருநெல்வேலி ஜவுளி ரக மேலாளர் எஸ். கணபதிசுப்பிரமணியன், காந்திமதி கோ ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் சேகர் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
பிறகு ஆட்சியர் கூறியது: இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களில் கோ ஆப்டெக்ஸ் முதன்மையாக திகழ்கிறது. கைத்தறி நெசவாளர்களின் சிறந்த துணிகள் உற்பத்தி, வாடிக்கையாளர்களின் பேராதரவால் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ. 316 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளத்தின் ஆலப்புழை கிளை உள்பட 16 விற்பனை நிலையங்கள் அடங்கிய இந்த மண்டலத்தில் மட்டும் ரூ. 26 கோடிக்கு விற்பனையானது.
2017 இல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 13.92 கோடி விற்பனை நடைபெற்றது. நிகழாண்டு ரூ. 18.40 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 6 விற்பனை நிலையங்களில் ரூ. 7.68 கோடிக்கும், காந்திமதி விற்பனை நிலையத்தில் ரூ. 4.50 கோடிக்கும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளிர் விரும்பும் வகையில் மென்பட்டு சேலைகள், திருமண பட்டுச்சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், ஜெயகார்த்திகா காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், ஆயத்த ஆடை ரகங்கள், வேட்டிகள், லுங்கிகள் போன்றவை நவீன டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கைத்தறி துணிகளை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com