திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவுக்கு முன்னேற்பாடுகள் தயார்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா அக்.31ஆம் தேதி தொடங்கி நவ. 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்தல் உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. எஸ்.சுந்தர்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சி.த.செல்லப்பாண்டியன், கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பேரூராட்சி சார்பில் 15 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பந்தல்கள் அமைக்கப்படும். திருவிழா நாள்களில் உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்படுவதோடு, தாற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படும். சுகாதாரத் துறை சார்பில் கொசு மருந்து தெளிக்கப்படும். தயார் நிலையில் மருத்துவக் குழுக்களும், அரசு மருத்துவமனையில் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலிக்கு நவ. 5ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயிலும், பல்வேறு வழித்தடங்களில் சுமார் 250 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து நாழிக்கிணறு பேருந்து நிலையத்துக்கு 2 சிற்றுந்துகள் இயக்கப்படும். கடலோரத்தில் மீன்வளத் துறை, தீயணைப்புத் துறையுடன் இணைந்து தயார் நிலையில் மீட்புக் குழுவினர் நிறுத்தப்படுவர்.
நவ.5ஆம் தேதி பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண வசதியாக பெரிய அளவிலான எல்.இ.டி. டி.வி.க்கள் வைக்கப்படும். பி.எஸ்.என்.எல். சார்பில் கூடுதலாக 2 இடங்களில் தாற்காலிக அலைவரிசை கோபுரங்கள் நிறுத்தப்படும். நகரின் எல்லையில் தாற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்படும்.
கார் பாஸ்கள் வழங்கப்பட்டு, அவற்றின் நிறம் வாரியாக குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்படும். பக்தர்களுக்கு மலிவு விலை சாப்பாடு ரூ. 28-க்கு வழங்கப்படுவதுடன், உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் உணவுப் பாதுகாப்புத் துறையால் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கூட்டத்தில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ.தியாகராஜன், நெல்லை மண்டல இணை ஆணையர் லெட்சுமணன், இணை ஆணையர்கள் பாரதி, பொன்சுவாமிநாதன், செந்தில்வேலவன், டி.எஸ்.பிக்கள் கோ.ராஜராஜன், கண்ணன், காவல் ஆய்வாளர்கள் க.ஆடிவேல், பெரி.லெட்சுமணன், வட்டாட்சியர் து.செந்தூர்ராஜன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், பேரூராட்சி செயல் அலுவலர் வீ.சுப்பாராஜ், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் மதுசூதனன், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் தவமணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆனந்த், சக்திவேல், போக்குவரத்து மேலாளர் பழனியாண்டி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இரா.பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பானு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வரவேற்றார். கோயில் இணை ஆணையர் தா.வரதராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com