குலசேகரன்பட்டினம் தசரா: நாளை கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் தசரா பெருந்திருவிழா சனிக்கிழமை (அக். 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குலசேகரன்பட்டினம் தசரா: நாளை கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் தசரா பெருந்திருவிழா சனிக்கிழமை (அக். 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்.11ஆம் தேதி வரை 11 நாள்கள் திருவிழா நடைபெறும்.

கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்படுவது குலசேகரன்பட்டினத்தில்தான். ஆண்டுதோறும் 11 நாள்கள் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டு சனிக்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே கொண்டுவரப்படும். காலை 6 மணிக்கு  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 8 மணிக்கு தசரா விழா கொடியேற்றம் நடைபெறும்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணிந்த பக்தர்கள் காளி உள்ளிட்ட பல்வேறு தெய்வ வேடங்கள், காவலர், குறவன், குறத்தி, சிங்கம், கரடி உள்ளிட்ட பல்வேறு  வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். இதுதவிர தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வீதிகள்தோறும் தசரா குழு அமைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்து 10ஆம் நாளில் கோயில் உண்டியலில் செலுத்துவார்கள்.
சூரசம்ஹாரம்: தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் பத்தாம் திருநாளான அக்.10ஆம் நள்ளிரவு நடைபெறும். முன்னதாக, இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளும் அம்மன், மகிசாசுரனை வதம் செய்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, அக்.11 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை, சுவாமி சிதம்பரேஸ்வரர் கோயில் மற்றும் திருக்கோயில் கலையரங்கம் ஆகியவற்றில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படும் அம்மன் மாலை 5.30 மணிக்கு கோயிலை வந்தடைவார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்வர். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். விழா நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை அம்மனுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம,  கற்பகவிருட்ஷம், ரிஷபம், மயில், காமதேனு, சிம்மம், பூஞ்சப்பரம், கமலம், அன்னம், வாகனங்களில், துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிஷாசுரமர்த்தினி, ஆனந்தநடராஜர், கஜலட்சுமி, கலைமகள், திருக்கோலங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருக்கோயில் கலையரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திருமுறை இன்னிசை, சமய சொற்பொழிவு, பரத நாட்டியம், பக்தி இன்னிசை, மகுட இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி.லட்சுமணன், உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி, கோயில் நிர்வாக அதிகாரி  இரா.ராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com