தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்ற 50 லாரிகள் சிறைபிடிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் கைது

தூத்துக்குடி அருகே தனியார் தொழிற்சாலைகளுக்காக லாரிகளில் நிலத்தடிநீர் எடுத்துச் சென்ற 50-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை

தூத்துக்குடி அருகே தனியார் தொழிற்சாலைகளுக்காக லாரிகளில் நிலத்தடிநீர் எடுத்துச் சென்ற 50-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.  இதையடுத்து,  போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில்,  வல்லநாடு,  தெய்வச்செயல்புரம்,  ஏரல்,  வாகைகுளம்,  ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் தனிநபர்கள் விளை நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மின் மோட்டார்கள் மூலம் நீரை உறிஞ்சி டேங்கர் லாரிகளில் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு அதிக பணத்துக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட கிராம மக்கள்,  நிலத்தடி நீர் விற்பனைக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
வருவாய்த் துறை அதிகாரிகளும்,  போலீஸாரும் நிலத்தடி நீரை கொண்டுச் செல்லும் நபர்களுக்கு துணைச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில்,  வல்லநாடு,  தெய்வச்செயல்புரம்,  ஏரல்,  வாகைகுளம்  உள்ளிட்ட பகுதியில் இருந்து லாரிகளில் நிலத்தடி நீர் எடுத்துச்செல்வதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி-திருநெல்வேலி நான்குவழி சாலையில் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர்.   பின்னர்,  அந்த வழியாக நிலத்தடி நீரை எடுத்துச் சென்ற 50-க்கும் மேற்பட்ட லாரிகளை மறித்து சிறைபிடித்த அவர்கள்  லாரியில் உள்ள தண்ணீரை சாலையில் திறந்து விட்டு விளைநிலங்களில் அனுமதியின்றி தண்ணீரை எடுப்பதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
 இதையடுத்து,  தூத்துக்குடி புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீமைச்சாமி தலைமையிலான புதுக்கோட்டை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்ணீர் லாரிகளை பறிமுதல் செய்து நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால்,  போலீஸாருக்கும்,  போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். போராட்டகாரர்களால் சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com