ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது: ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்தவித ரசாயனக் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்கலாம்.
செயற்கை வர்ணப்பூச்சு கொண்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது. அதுபோன்ற சிலைகள் நிறுவப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் திரேஸ்புரம், முத்தையாபுரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், வேம்பார் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
அனுமதி வழங்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து புதிதாக எந்தவொரு இடத்திலும் சிலைகளை கரைக்க அனுமதி இல்லை.
சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்போது சாலைகளின் அருகே மற்றும் சாலைகளின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளில் சிலைகள் மோதிடாத வகையில் சிலைகளின் உயரங்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
கடலோரத்தில் சிலைகளை கரைக்காமல் கடலினுள் குறைந்தது 500 மீட்டர் தொலைவு எடுத்துச் சென்று கரைக்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது தொடர்பாகவும், நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், மாவட்ட காவல்துறையின் சார்பிலும் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com