'திருச்செந்தூர் கோயில் பகுதி வணிகர்களை அகற்றினால் மாநிலம் தழுவிய போராட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திலிருந்து வணிகர்களை அகற்றினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திலிருந்து வணிகர்களை அகற்றினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இக்கோயிலில் கடந்த 14ஆம் தேதி காலையில் கிரிவலப் பாதையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பேச்சியம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், திருக்கோயில் சார்பில் கிரிவலப்பாதை முழுவதும் அடைக்கப்பட்டு, கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. எனவே, கிரிவலப்பாதையில் உள்ள வணிகர்கள் மற்றும் கலையரங்க பகுதி வணிகர்கள் என மொத்தம் 86 பேருக்கு திருக்கோயில் சார்பில் சனிக்கிழமை இரவு அறிவிப்பாணை வழங்கப்பட்டது. மேலும் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கடைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கையால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கோயில் பகுதியில் கிரிவலப் பாதையை பார்வையிட்டார். அவருடன் பேரமைப்பு தெற்கு மாவட்டத் தலைவர் ரெ. காமராசு, மாநில நிர்வாகிகள் மகேஸ்வரன், வெள்ளையா, மாவட்ட நிர்வாகிகள் தனபாலன், ஆனந்த், திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கச் செயலர் செல்வகுமார், நகர யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவர் வ. கணேசன், திருக்கோயில் வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்வண்ணன், செயலர் பொன்ராஜ், திருக்கோயில் கலையரங்க பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தலிங்கம், பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி. செந்தில்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து ஏ.எம். விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிரிவலப்பாதை மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கட்டடம் இடிந்து விழுவதற்கு முறையாக பராமரிக்காத துறை அதிகாரிகளே காரணமாவார்கள். இதை காரணம் காட்டி இங்குள்ள நூற்றுக்கணக்கான வியாபாரிகளை அகற்ற அதிகாரிகள் திட்டமிடுவதாகத் தெரிகிறது. ஒரு வியாபாரிக்கு பிரச்னை என்றாலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வியாபாரிகளும் ஒன்றுதிரண்டு போராடுவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com