தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரும்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் சாந்தகுமார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு சேவைகள் கழகம் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவியுள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 2620 பேருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் இலவசமாக 440 நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
வெளியிடங்களில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் மையங்களில் ரூ. 6 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் நிலையில், ஏழை மக்களின் நலன் கருதி அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணமாக ரூ. 2,300 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தனியார் மற்றும் புறநோயாளிகளுக்கு அதே கட்டணம் வசூலிக்கப்படும்.  இந்த ஸ்கேன் மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
எம்ஆர்ஐ ஸ்கேனில் காந்த சக்தி இருப்பதால் கதிர்வீச்சு கிடையாது. மேலும், ஸ்கேனில் சதைப்பகுதி மற்றும் உள்ளுறுப்புகளை தெளிவாக பார்க்க முடியும். இதனால் சிறுசிறு மாற்றங்களைக்கூட ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து விடலாம்.
முப்பரிமாணத்தில் படங்கள் கிடைப்பதால் பலவித கோணங்களில் பார்க்கும் வசதி இதில் இருக்கிறது. கதிர்வீச்சு இல்லை என்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.  எனவே, தூத்துக்குடி மாவட்ட மக்கள் இந்த வாய்ய்பபை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரும் அதே ரூ. 2300 என்ற கட்டணத்தில் ஸ்கேன் செய்து கொள்ளலாம். தற்போது தினமும் 20 பேர் வீதம் ஸ்கேன் எடுத்துச் செல்கின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com