ஜல்லிக்கட்டு: நல்ல தீர்ப்பு கிடைக்கும்

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
பிரதமர் நரேந்திர மோடியின் உரையானது மிகப்பெரிய நம்பிக்கையை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்களுடைய வாழ்க்கை ஒளி பெற வேண்டும்; சாதாரண மக்களையும் இந்த நாட்டின் பொருளாதாரத்தோடு இணைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையோடு பிரதமர் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை உருவாக்கக் கூடிய நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் வீட்டுக் கடன், விவசாயக் கடன், சிறுதொழில் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
விவசாயிகள் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகள் தைரியமாக இருக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. மாநில அரசானது மத்திய அரசின் திட்டங்களை விவசாயிகளுக்கு கொடுக்கக்கூடிய வகையில் துரிதமாக செயல்பட வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை போராட்டம் நடத்துவது மூலமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்போதுகூட நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தாண்டு பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடைபெற வாய்ப்புகள் உண்டு.
இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை இலங்கையில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில், நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
தமிழக முதல்வரை திங்கள்கிழமை (ஜன. 2) சந்திக்க உள்ளேன். அப்போது, கிழக்கு கடற்கரைச் சாலை அமைப்பது, மதுரையில் 5 ஆயிரம் கோடி ரூபாயில் சுற்றுவட்டச் சாலை அமைப்பது குறித்தும், குளச்சல் வர்த்தக துறைமுகம் கொண்டுவரக்கூடிய வகையில் மாநில அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைக்க இருக்கிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com