தூத்துக்குடியில் வட்டியில்லா கடன் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி

தூத்துக்குடியில் நகைகளை வைத்து வட்டியில்லா கடன் தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டோர்

தூத்துக்குடியில் நகைகளை வைத்து வட்டியில்லா கடன் தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம், ஜாகீர்உசேன்நகர், மேட்டுப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலர் அகமது இக்பால் தலைமையில் புதன்கிழமை அளித்த புகார் மனு: தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபீக் என்பவர், "காயல்மூஸா அழகிய கடன் திட்டம்' என்ற பெயரில் இஸ்லாமிய மக்களுக்கு தங்க நகைகள் மீது வட்டியில்லா கடன் வழங்குவதாகக் கூறி அறிமுகமானார். தூத்துக்குடி திரேஸ்புரம், ஜாகீர் உசேன் நகர், மேட்டுப்பட்டி பகுதி மக்களிடம் இத்திட்டம் குறித்து தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி தங்க நகைகளை வட்டியின்றி அடமானம் வைத்து பணம் பெற்றோம். நகைகளைத் திருப்ப அவரிடம் பணம் கொடுத்தபோது, 10 நாளில் நகைகளைத் தருவதாகக் கூறினார். ஆனால், திடீரென தலைமறைவாகிவிட்டார்.
அவர் இதேபோல 25-க்கும் மேற்பட்டோரிடம் 90 பவுன் நகைகள், நகைகளைத் திருப்புவதற்கு கொடுத்த பணம் என, ரூ. 30 லட்சம் வரை மோசடி செய்துவிட்டு குடும்பத்தினருடன் தலைமறைவானதாகத் தெரிகிறது. எனவே, அவரைப் பிடித்து, தங்களது நகைகளை மீட்டுத் தரவேண்டும் என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இல்லாததால் கூடுதல் கண்காணிப்பாளர் கந்தசாமியிடம் அவர்கள் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com