வறட்சி:ஆத்தூர் பகுதியில் குடிநீர் விநியோகம் குறைப்பு

மேல ஆத்தூர் குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து ஆறுமுகனேரி, ஆத்தூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு

மேல ஆத்தூர் குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து ஆறுமுகனேரி, ஆத்தூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் வறட்சி காரணமாக 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலைய நீர் தேக்கத்திலிருந்து வழங்கப்படும் குடிநீர் அளவு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 மேல ஆத்தூர் நீரேற்று நிலையத்திலிருந்து ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினத்திற்கு தினசரி வழங்கப்படும் 21 லட்சம் குடிநீர் தற்போது 10 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூருக்கு வழங்கப்பட்டு 13.4 லட்சம் லிட்டர் குடிநீர் 5 லட்சமாகவும், ஆத்தூருக்கு வழங்கப்படும் 6.50 லட்சம் குடிநீர் 3.50 லட்சமாகவும், புன்னக்காயலுக்கு வழங்கப்படும் 4.4 லட்சம் குடிநீர் 2 லட்சமாகவும், மேல ஆத்தூருக்கு வழங்கப்படும் 3.40 லட்சம் குடிநீர் 1.20 லட்சமாகவும் சேர்ந்தபூமங்கலத்திற்கு வழங்கப்படும் 1.70 லட்சம் குடிநீர் 70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
 ஸ்ரீவைகுண்டம் அணையில் போதிய நீர் இல்லாததால் மேல ஆத்தூர் நீர் தேக்கத்திலிருந்து போதிய அளவு குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. பாபநாசம் அணையிலிருந்து 104 கன அடி தண்ணீர்தான்  குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தை தாண்டி வருவதற்கு வாய்ப்பில்லை.
 மேல ஆத்தூரில் உள்ள 11 அடி நீர் தேக்கத்தில் தற்போது 5.75 அடி தண்ணீர் தான் உள்ளது. இதனை ஜனவரி மாத இறுதிவரை சமாளிக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். மழை காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்காத நிலையில் நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் குடிநீர் குறைவாக வழங்கப்படுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com