கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டப் பணி ஆய்வுக் கூட்டம்

கோவில்பட்டி தனிக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பயணியர் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது

கோவில்பட்டி தனிக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பயணியர் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
ரூ. 81.82 கோடியில் கோவில்பட்டி தனிக் குடிநீர் திட்டத்திற்கான பணி 2016 பிப்ரவரி 12ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பயிர்களையும் பார்வையிட வந்த தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரேஸ்குமார் கோவில்பட்டி பயணியர் விடுதிக்கு சனிக்கிழமை வந்திருந்தார்.
அங்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு உள்ளிட்டோர் பங்கேற்ற கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டப் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ரவிகுமார், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், உமாமகேஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முருகதாஸ், தனிக்குடிநீர் திட்ட நிர்வாகப் பொறியாளர்கள் சுப்பிரமணியன், உதவி நிர்வாகப் பொறியாளர் விஜயபாலன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ககாரின், செந்தூர்பாண்டியன், கோட்டாட்சியர் கண்ணபிரான், வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரேஸ்குமார்,  அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டத்துக்காக சீவலப்பேரி அருகே தாமிரவருணியாற்றில் 4 புதிய நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 2 நீர் உறிஞ்சி கிணறுகள் அங்கு உள்ளன.
தற்போது கோவில்பட்டிக்கு ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள 2 நீர் உறிஞ்சி கிணறுகளும் இந்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன் பின் தினமும் கூடுதலாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
எஞ்சிய பணிகள் விரைவில் முடிவடைந்து, 2017 ஏப்ரல் மாதத்துக்குள் தனிக்குடிநீர்த்  திட்டத்தின்கீழ், கோவில்பட்டியில் குடிநீர் விநியோகிக்கப்படும். அப்போது நாள் ஒன்றுக்கு 190 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com