தூத்துக்குடியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு: ரூ. 4 கோடியில் புதிய திட்டத்துக்கு மாநகராட்சி ஏற்பாடு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை தாற்காலிகமாக சமாளிக்கும் வகையில் ரூ. 4 கோடியில் புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
60 வார்டுகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தாமிரவருணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து மூன்று பைப் லைன்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி மாநகராட்சிப் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய தினமும் ஏறத்தாழ 54 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை 24 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் தற்போது தண்ணீர் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
போதிய மழை இல்லாததால் அணையில் ஏற்பட்ட வறட்சி காரணமாக தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி மாநகாரட்சிப் பகுதியில் தற்போது மாதத்துக்கு இரண்டு நாள் என்ற அடிப்படையில் 15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
போதிய தண்ணீர் இல்லாததால் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் அமைக்கப்பட்டிருக்கும் குழாய்களில் இருந்து தினமும் மக்கள் வரிசையில் நின்று குடங்களில் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர்.
இதே பிரச்னை மாவட்டம் முழுவதும் நிலவி வருவதால் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதையடுத்து, தாமிரவருணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் விரைவில் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் அறிவித்தார்.
இதற்கிடையே, குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ரூ. 282 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் 4 ஆவது பைப் லைன் திட்டப் பணிகள் ஜனவரி 15ஆம் தேதிக்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வறட்சி மற்றும் பணப்பிரச்னை காரணமாக இந்தப்பணிகள் தற்போது பிப்ரவரி 15ஆம் தேதி வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ரூ. 4 கோடியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வல்லநாடு பகுதியில் உள்ள 14 கிணறுகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மாநகராட்சியை ஒட்டியுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து 22 இடங்களில் தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 200 முதல் 250 லாரிகளில் தண்ணீர் எடுக்க வாய்ப்பு உள்ளது.
இதுதவிர, 20 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், மாநகரில் 20 இடங்களில் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைத்து அதில் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தண்ணீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கே. ராஜமணி கூறியது: தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுதொடர்பாக அரசுக்கு ரூ. 4.05 கோடி நிதி கேட்டு கருத்துரு அனுப்பியுள்ளோம். அரசின் அனுமதி பெற்ற பிறகு விரைவில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com