முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடனுதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க 25 சதவீத அரசு மானியத்துடன் ரூ. 1 கோடி வரையில் திட்ட முதலீட்டு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க 25 சதவீத அரசு மானியத்துடன் ரூ. 1 கோடி வரையில் திட்ட முதலீட்டு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு (டிப்ளமா), ஐ.டி.ஐ. மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சியை கல்வி தகுதியாகப் பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற்று தரப்படுகிறது. திட்ட முதலீட்டில் 25 சதவீத முதலீட்டு மானியமாகவும், செலுத்திய வட்டியில் 3 சதவீத வட்டி மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினருக்கு வயது 21-க்கு மேல் 35-க்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினரான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும்.
திட்ட மதிப்பீடு ரூ. 5 லட்சத்துக்கு மேல் அதிகபட்சம் ரூ. 1 கோடி வரையிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கலாம். பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தன் பங்காக முதலீடு செய்யவேண்டும்.
வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க ‌w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e. ‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து,  விண்ணப்பத்தை 2 நகல்கள் எடுத்து ஆவணங்களை இணைத்து 7 நாள்களுக்குள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், புறவழிச்சாலை, தூத்துக்குடி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளரை நேரிலோ அல்லது 0461-2340152, 2340053 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com