மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ. 23 கோடியில் திட்டம்: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ. 23 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ. 23 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் 53 கிராமங்களில் வறட்சி தொடர்பாக ஆய்வுக் குழுவினர் பார்வையிட்டனர். இதில், 13 வகையான பயிர்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் 95 சதவீத பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
 இதுதவிர,  மாவட்டத்தில் உள்ள 450 கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் பாதிப்பு குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக நடைபெறும் ஆய்வுக்குப் பிறகே முழு பாதிப்பு தெரியவரும்.  மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை சமாளிப்பதற்காக கடந்த 7 ஆம் தேதி முதல் தாமிரவருணி ஆற்றில் இருந்து 20 எம்ஜிடி என்ற திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான தண்ணீரை அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
 குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.23 கோடி நிதியுதவி கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் மாவட்டத்தில் 4592 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
 தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ. 4 கோடியும், கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ. 15 கோடியும், காயல்பட்டினம், கோவில்பட்டி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ. 4 கோடிகளிலும் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த நிதி வரும் வரை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நிதி மூலம் பணிகள் நடைபெறும்.
 தூத்துக்குடியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின் போது பள்ளி மாணவி மரணம் அடைந்தது தொடர்பாக சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் விசாரணை நடத்தி வருகிறார். அவர் அறிக்கை அளித்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும், ஊரக வளர்ச்சி முகமை மூலம் சிந்தலக்கரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த தொழிலாளிகளின் குடும்பத்துக்கு நிதியுதவியையும் ஆட்சியர் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com