கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

கூட்டுறவு சங்கங்களின் பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை பெற வலியுறுத்தி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

கூட்டுறவு சங்கங்களின் பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை பெற வலியுறுத்தி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கான பிரீமியத் தொகையை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் செலுத்தி வருகின்றனர். இதற்கான காலக்கெடு இம்மாதம் 15ஆம் தேதி வரை என அரசு முடிவு செய்தது.  ஆனால் தற்போது கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளிடமிருந்து பிரீமியம் தொகை பெற மறுக்கின்றனர்.
எனவே, கூட்டுறவுச் சங்கங்களில் காப்பீட்டு பிரீமியம் தொகையை பெற வலியுறுத்தி, மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் அ.வரதராஜன் தலைமையில், விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர், கோட்டாட்சியர் கண்ணபிரானிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுடன் பேசி பிரீமியம் தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்ததையடுத்து, சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
கோவில்பட்டி பகுதியில் மானாவாரி நிலங்களில் உள்ள பயிர்கள் 100 சதவீதம் முழுமையாக பொய்த்துவிட்டது. தற்போது தமிழக அரசு 33  சதவீதம் பயிர் பாதுகாப்புக்கு ரூ.3ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக தெரிகிறது. விவசாயிகளுக்கு முழுமையான அளவில் இழப்பீடு வழங்க வில்லை என்றால் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என பாரதிய கிசான் சங்கத் தலைவர் ரெங்கநாயகலு, செயலர் சேசு ஆகியோர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com