திருவாதிரைத் திருவிழா: கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இதையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.
பின்னர் காலை 5 மணிக்கு நடராஜர், மாணிக்கவாசகர், சிவகாமி அம்பாளுக்கு 18  வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு ஆருத்ரா சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு நடராஜர், மாணிக்கவாசகர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளம்:  சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அருள்மிகு ஸ்ரீஅழகிய கூத்தர் சமேத ஸ்ரீசிவகாமி அம்மாள் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கடந்த ஜன.2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடக்கநாளன்று கணபதி ஹோமம், அபிஷேகத்தை தொடர்ந்து கொடியேற்றம், திருவெம்பாவை, யாகசாலை பூஜை, மாணிக்கவாசகர் வழிபாடு ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி உலா வருதல் நடைபெற்றது.
10ஆம் நாள் விழாவான புதன்கிழமை  கணபதி ஹோமம், 36 வகையான சிறப்பு அபிஷேகம், ஆருத்ரா தரிசனம், மகா தாண்டவ தீபாராதனை, பஞ்சமூர்த்தி வீதியுலா, அன்னதானம், திருவிளக்கு பூஜை, சேர்க்கை ஆகியன நடைபெற்றன. இதில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாச தேசிய சத்தியஞான பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்றார்.
உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் காலை 6 மணிக்கு நடராஜ பெருமான், மாணிக்கவாசகர், சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு 16 வகையான அபிஷேகங்கள், 18 வகையான சோடச, உபசார தீபாராதனைகள், பசு தீபாராதனை, கண்ணாடிச்சேவை நடைபெற்றன. தொடர்ந்து நடராஜர்,சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகியோர் ரதவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோயில், உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோயில் ஆகியவற்றிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை 3.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.
தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சப்பரங்களில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்ந்தார். அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில், இதை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்பாள் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜை மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து வேதபாராயணம், திருவெம்பாவை பாடப்பட்டது.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் திருவாதிரை விழாவையொட்டி புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த 2ஆம் தேதி திருவிழா தொடங்கியது. நாள்தோறும் ஸ்ரீமாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் திருவெம்பாவை பாடி தீபாராதனைகளும்,  ஸ்ரீமாணிக்க வாசகர் வீதியுலாவும் நடைபெற்றன.
புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீநடராஜருக்கும், ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கும், ஸ்ரீமாணிக்கவாசகர் மற்றும் காரைக்கால் அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, கால சாந்தி பூஜை நடைபெற்றன.
தொடர்ந்து கோ பூஜை, களி நிவேதனம், கருப்பு இரட்சை, ஸ்ரீநடராஜருக்கு தாண்டவ தீபாராதனை, திருவெம்பாவை பாடி தீபாராதனை, பஞ்சபுராணம் பாடுதல் ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீநடராஜர் மற்றும் ஸ்ரீமாணிக்கவாசகர் கோயில் பிரகார கிரி வீதி வலம் வருதல் நடைபெற்றது.
இதே போல் ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் ஸ்ரீநடராஜர தேவார பக்த பஜனை ஆலயம் மற்றும் ஆறுமுகனேரி சைவ வேளாளர் சித்தாந்த சங்கம் சார்பில் திருவாதிரை திருவிழா நடைபெற்றது.
ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீ சோமநாத சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருநாளை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது,
இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கும்ப பூஜை, அபிஷேகத்தை தொடர்ந்து காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ நடராஜர் ரதவீதி எழுந்தருளல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com