பொங்கல் விழா

திருச்செந்தூரில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் தொடங்கிவைத்தார்.

திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் பொங்கல் பரிசு விநியோகம்
திருச்செந்தூரில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் தொடங்கிவைத்தார்.
வீரபாண்டியன்பட்டணம் ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிசி, சீனி, கரும்பு மற்றும் முந்திரி பருப்பு, கிறிஸ்துமஸ் பழம், ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி விநியோகத்தை அவர் தொடங்கிவைத்தார்.  நிகழ்ச்சியில், வட்டாட்சியர் து.செந்தூர்ராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளம் பகுதியில்...
சாத்தான்குளம் வட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த வட்டத்தில் 25,545 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
மேலசாத்தான்குளம் ரேஷன் கடையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சாத்தான்குளம் வட்டாட்சியர் மு.நடராஜன் தலைமை வகித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி, விநியோகத்தை தொடங்கிவைத்தார்.
இதில், வட்ட வழங்கல் அலுவலர் ரதிகலா, குடிமைப்பொருள் ஆய்வாளர் சுராஜ், கூட்டுறவு சார்-பதிவாளர் ஜோதிராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெபராஜ், பணியாளர் கோபி அதிசயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தில்...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மற்றும் பெமினா சங்கம் ஆகியன சார்பில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு நிறுவன பொதுமேலாளர் சோனிகா முரளிதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முருகேஸ்வரன், இணை துணைத் தலைவர் திவாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொங்கலிடப்பட்டது. இதேபோல், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தொழிற்பயிற்சி மையமான தாமிரமுத்துக்கள் வளாகத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் குமாரவேந்தன் தலைமை வகித்தார்.
தொழிற்பயிற்சி மைய முதல்வர் லட்சுமணன், பயணிகள் நலச் சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். இதில், தாமிர முத்துக்கள் தொழிற்பயிற்சி மைய மாணவர், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாத்தான்குளம், நாசரேத் பள்ளிகளில்...
சாத்தான்குளம், நாசரேத் பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் இம்மாக்குலேட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு ரெமிஜியூஸ் எஸ். லியோன் அடிகளார் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் எஸ். ரூபர்ட் வரவேற்றார். தொடர்ந்து பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவர், மாணவிகள் அணிவகுப்பு நடத்தினர். பின்னர் மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் அ.ஜகிபோர்ஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரேனா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
நாசரேத் சாலமோன் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சத்யவதி மனோகரன், பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் ஆகியோர் பேசினர். துணை முதல்வர் அனி ஜெரால்டு கொடி ஏற்றினார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் மாணவர், மாணவிகள் தாங்கள் கொண்டு வந்த பொருள்களை வைத்து  பொங்கலிட்டனர்.

உடன்குடி பள்ளியில்...
உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சேகர குரு செல்வன் மகராஜா, உதவி சேகர குரு ஜான்சாமுவேல் ஆகியோர் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கிவைத்தனர்.  விழாவுக்கு, பாஜக மாவட்டச் செயலரும் தொழிலதிபருமான ரா.சிவமுருக ஆதித்தன் தலைமை வகித்து போட்டியைத் தொடங்கிவைத்தார். பள்ளித் தாளாளர் ஞா.அருள்ராஜா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் வரவேற்றார். மாணவர்கள், ஆசிரியர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் மைக்கேல் நன்றி கூறினார்.

ஸ்ரீவைகுண்டத்தில்...
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் புகையில்லாத பொங்கல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செயல் அலுவலர் சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில், தலைமை எழுத்தர் பாலசுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் கோபால், பேரூராட்சி அலுவலர்கள், குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று, புகையில்லாத பொங்கல் குறித்த விழிப்புணர்வு கோஷமிட்டப்படி சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com