பொங்கல் விழா

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கலிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயத்தில்...
தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கலிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை இந்துக்கள் தங்களது வீடுகளின் முன்பு பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபட்டனர். இதேபோல, தூத்துக்குடியில் கிறிஸ்தவர்களும் ஆலயத்தில் பொங்கலிட்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
குரூஸ்புரத்தில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் சனிக்கிழமை அனைத்து சபைகளிலும் உள்ள அன்பியம் அமைப்பு சார்பில் பொங்கலிடப்பட்டது. மொத்தம் 40 பானைகளில் பொங்கல் தயார் செய்யப்பட்டது.
பின்னர், மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பொங்கல் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்து கொண்டு கும்மியடித்து கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து பொங்கல் பானைகளில் இருந்த சர்க்கரை பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பாஞ்சாலங்குறிச்சியில்...
தூத்துக்குடி அருகேயுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில், மாட்டுப் பொங்கலையொட்டி, பசு மாடுகளுக்கு கோமாதா பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சியும், பசுமாடுகளுக்கு கோமாதா பூஜை வழிபாடும் நடைபெற்றன.
அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம், மெல்லிசை குரல் ஆகியவை நடைபெற்றன. மேலும், பல்வேறு கலை குழுவினர் சார்பில் ஜிம்னாஸ்டிக், தற்காப்புக்கலை, சிலம்பாட்டம், இன்னிசை நிகழ்ச்சி, இசைக்குழு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அலுவலர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் முருகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் சமுத்திரம், வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, இணைச் செயலர் சண்முக மல்லுச்சாமி, வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆதரவற்றோர் இல்லங்களில்...
தூத்துக்குடியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி திருவிக நகர் சக்திபீடம் சார்பில், ஆதரவற்றோர் இல்லங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் பொங்கல் விழா சிறப்பு வழிபாடு  சனிக்கிழமை நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் நலமுடன் வாழவும் மகளிர் 1008 குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். சக்தி பீடத்தலைவர் கிட்டப்பா அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு தீபாராதனை செய்து வழிபாட்டை தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, தூத்துக்குடி கால்டுவெல் காலனி நேசக்கரங்கள் இல்லம், கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகர் அன்னை கருணை இல்லம், கதிர்வேல்நகர் ஆன்மாவின் அன்புக் காப்பகம், பெத்தானி பார்வையற்ற பெண்கள் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழஅழகாபுரி, பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், நரிக்குறவர் குடியிருப்பு மற்றும் தெருவோர ஏழைமக்கள் உள்ளிட்ட 1,200 பேருக்கு பொங்கல், கரும்புகள், 25 பேருக்கு வேட்டி- சேலைகள், வழங்கப்பட்டன.
மத்திய கூட்டுறவு பண்டகசாலைக் கண்காணிப்பாளர் எஸ்.கணேஷ் சமுதாயப் பணியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், ஆன்மிக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் சக்திமுருகன், ஆதிநாராயணன், தனபால், செந்தில் ஆறுமுகம், திருஞானம், காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com