தூத்துக்குடியில் குடிநீர்த் தட்டுப்பாடு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய

தூத்துக்குடியில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மீனவப் பெண்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வறட்சி காரணமாக தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வல்லநாடு நீரேற்று நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது முற்றிலுமாக விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் குடங்களுடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை நாடிச் சென்று வருகின்றனர்.
இதற்கிடையே, மாநகரில் நீரேற்று நிலையங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் தற்போது கூடுதல் குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சிறிய அளவிலான குடிநீர்த் தொட்டிகள் அமைத்து தண்ணீர் வழங்கப்படுவதால் அதில் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒவ்வொருவரும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் உள்ள குடிநீர்த் தொட்டி முன்பு குடிநீர் பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்து வருகின்றனர். ஆனால், அங்கு போதுமான தண்ணீர் இல்லை எனக் கூறி மாநகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை தண்ணீர் வழங்க மறுத்தனர்.
இதையடுத்து, தண்ணீர் பிடிக்க காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி நடைபெற்றது.
மீனவப் பெண்கள் மறியல்: இதற்கிடையே, ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் வி.இ. சாலையில் அந்தோணியார் ஆலயம் முன் திங்கள்கிழமை திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மத்தியபாகம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தினர். தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com