கோவில்பட்டியில் அரசுப் பேருந்து, ஆட்டோ மோதல்: இரு பெண்கள் சாவு

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோவும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பெண்கள் இறந்தனர்.

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோவும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பெண்கள் இறந்தனர்.
கோவில்பட்டியை அடுத்த முடுக்குமீண்டான்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுருட்டுலிங்கம் (29). ஆட்டோ ஓட்டுநர். இவர் ஓட்டிச் சென்ற ஆட்டோவில் அதே பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி (50), நீலாயதாட்சி (70), ஆவுடையப்பன் (45), இவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் தாமோதரன் (8), ஆவுடையப்பனின் தாய் லோகநாயகி (70), ஸ்ரீசித்தர் மகள் ராஜஸ்ரீ (8), நித்தியகல்யாணி (64), சண்முகசுந்தரம் (75), மீனாட்சி (70), மீரா (40) ஆகியோர் புறவழிச் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பி கொண்டிருந்தனர். புறவழிச் சாலையில் உள்ள அணுகுசாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஆட்டோ சென்றபோது, திருநெல்வேலியிலிருந்து கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து, அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது.
இதில், ஆட்டோவில் பயணம் செய்த லோகநாயகி, நித்தியகல்யாணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர்.
டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான மேலப்பாளையத்தைச் சேர்ந்த மு. அலெக்ஸாண்டரிடம் (39) விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com