தூத்துக்குடியில் குடிநீர் கோரி தொடரும் போராட்டங்கள்: இன்று குடிநீர் விநியோகிக்க வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தினமும் பல இடங்களில் போராட்டங்கள்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தினமும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முத்தையாபுரத்தில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஏராளமானோர் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாத இடங்களுக்கு புதன்கிழமை குடிநீர் விநியோகிக்க வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிநீர் விநியோகம் பாதிப்பு:  வறட்சியால் அணைகளில் தண்ணீரின் அளவு குறைந்ததால் தாமிரவருணி ஆற்றில் வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீர் நீரேற்றம் செய்யும் நிலையத்தில் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வல்லநாட்டில் உள்ள 14 உறை கிணறுகள் தூர்ந்து போய்விட்டதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மாற்று ஏற்பாடாக மாநகராட்சிப் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டிகளில் கூடுதல் குழாய்கள் அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அனைத்து குடிநீர்த் தொட்டிகளின் முன்பும் ஏராளமான பொதுமக்கள் காலிக் குடங்களுடன் காத்திருந்து வருகின்றனர். வீடுகள்தோறும் வழங்கப்பட்டு வந்த குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தொடர் போராட்டங்கள்: சில இடங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாகவும், சில இடங்களில் 20 நாள்களுக்கு மேலாகவும் குடிநீர் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி ராஜாஜி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர்த் தொட்டிகளின் முன்பு இரவு தண்ணீர் வழங்கப்படாதாதல் அங்கும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் நடைபெறும் இடங்களுக்குச் செல்லும் போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி மாநகராட்சிக்குள்பட்ட 53 ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த முத்தையாபுரம் வடக்குத் தெரு பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை தெற்கு மண்டல அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முத்தையாபுரம் போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
இன்று குடிநீர் விநியோகம்: குடிநீர் பாதிப்பை சரி செய்யும் வகையில் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வல்லநாடு பகுதியை செவ்வாய்க்கிழமை காலை வந்தடைந்தது. அந்த தண்ணீர் அங்கிருந்து நீரேற்று நிலையம் மூலம் ஏற்றப்பட்டு மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிநீர்த் தொட்டிகள் நிரப்பப்பட்டதும் 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாத பகுதிகளுக்கு ஒரு மணி நேரம் என்ற அளவுக்கு புதன்கிழமை காலை முதல் தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்பார்த்தபடி தண்ணீர் கிடைத்துவிட்டால் குடிநீர்த் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com