ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் மாணவர், மாணவிகளின் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் 2ஆவது நாளாக கல்லூரி மாணவர், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் 2ஆவது நாளாக கல்லூரி மாணவர், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறு தழுவுதலுக்கு ஆதரவான கூட்டமைப்பு என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலமாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி வரை 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி,  வஉசி கல்லூரி, காமராஜ் கல்லூரி, இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி, கால்டுவெல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர், மாணவிகள் மற்றும் பல்வேறு இளைஞர்கள் அமைப்பினர் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் குவிந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர், மாணவிகள் முழக்கமிட்டனர். போராட்டத்தையொட்டி மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வ.உ.சி. திடலில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் மாணவர்களுடன் இளைஞர்களும் திரளாக கலந்துகொண்டனர். எம்.எல்.ஏ. அலுவலகம் அருகிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்: நாசரேத்தில் மர்காஷிஸ் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com