காமநாயக்கன்பட்டியில் சாலை மறியல்: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

காமநாயக்கன்பட்டி குறுவட்டத்தை கோவில்பட்டி வட்டத்திலிருந்து பிரித்து கயத்தாறு வட்டத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காமநாயக்கன்பட்டியில் வியாழக்கிழமை கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

காமநாயக்கன்பட்டி குறுவட்டத்தை கோவில்பட்டி வட்டத்திலிருந்து பிரித்து கயத்தாறு வட்டத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காமநாயக்கன்பட்டியில் வியாழக்கிழமை கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.
 கோவில்பட்டி வட்டத்தில் கழுகுமலை, நாலாட்டின்புத்தூர், கயத்தாறு, கடம்பூர், காமநாயக்கன்பட்டி, இளையரசனேந்தல் ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், கயத்தாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உதயமாகிறது என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
 இதையடுத்து, கோவில்பட்டி வட்டத்தில் உள்ள காமநாயக்கன்பட்டி குறுவட்டத்திற்கு உள்பட்ட காமநாயக்கன்பட்டி, குருவிநத்தம், அச்சங்குளம், முடுக்கலாங்குளம் ஆகிய 4 ஊராட்சிகளைச் சேர்ந்த 9 கிராமங்களை கோவில்பட்டி வட்டத்திலிருந்து பிரித்து கயத்தாறு வட்டத்துடன் இணைக்க இருப்பதாக தெரியவந்ததையடுத்து, அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 முடுக்கலாங்குளம் கிராம மக்கள் தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் இலவச வேஷ்டி, சேலைகளை தற்போது வரை வாங்காமல் புறக்கணித்தனர். இந்நிலையில், இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்காததையடுத்து வியாழக்கிழமை காமநாயக்கன்பட்டியில்கடையடைப்புப் போராட்டம் மற்றும் குருவிநத்தம் விலக்கில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
 இப்போராட்டத்தில், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், இலந்தம்பட்டி, அச்சங்குளம், செவல்பட்டி, சால்நாயக்கன்பட்டி, கோட்டையூர், முடுக்கலாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன், டி.எஸ்.பி. முருகவேல் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர்கள் மறுக்கவே போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 54  பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் காலை 10 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் மாலை 3 மணிக்கு முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com