கோவில்பட்டியில் அணிதிரண்ட அனைத்துத் தரப்பினர்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி, கோவில்பட்டியில் வியாழக்கிழமை, அரசு கலைக் கல்லூரி மாணவர், மாணவிகள் கல்லூரிக்குள்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி, கோவில்பட்டியில் வியாழக்கிழமை, அரசு கலைக் கல்லூரி மாணவர், மாணவிகள் கல்லூரிக்குள் செல்லாமல் கல்லூரி முன் திரண்டனர். பின்னர், கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்ட மாணவர், மாணவிகள் ஊர்வலமாக பயணியர் விடுதி முன், ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தனர். இதையடுத்து, கோவில்பட்டி அரசுக் கல்லூரிக்கு ஜன.19 முதல் ஜன.21ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
இதுபோல, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர், மாணவிகள் வியாழக்கிழமை காலை வழக்கம்போல கல்லூரிக்குள் சென்று, உள்மதிப்பீட்டுத் தேர்வை எழுதினர். பின்னர், முற்பகல் 11.30 மணிக்கு கல்லூரி முன் திரண்டு வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவில்பட்டியில் அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மற்றும் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் செல்வராஜ், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலர் பொன்முருகானந்தம், நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலர் ஹரிபாலகிருஷ்ணன், வருவாய்த் துறை வட்டச் செயலர் அறிவழகன் ஆகியோர் பேசினர்.
சமூக வலைதள நண்பர்கள்: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள், சமூக வலைதள நண்பர்கள் 2ஆவது நாளாக வியாழக்கிழமை கோவில்பட்டியில் தர்னாவில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு பயணியர் விடுதி வளாகத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
வழக்குரைஞர்கள்: வழக்குரைஞர்கள் பார் அசோசியேஷன் முன் ஒரு காளையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வழக்குரைஞர்கள் காளையுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.  அரசு அலுவலக வளாகம், புதுரோடு, எட்டயபுரம் சாலை வழியாக மீண்டும் பார் அசோசியேஷன் முன் ஊர்வலம் நிறைவடைந்தது. இதில், வழக்குரைஞர்கள் சங்கர்கணேஷ், ரெங்கராஜ், சந்திரசேகர், முத்துகுமார், ரவிகுமார், மணிகண்டநாகராஜன், சிவராஜகோபால், அய்யப்பன் என்ற போஸ் உள்பட திரளான வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
கயத்தாறு: கயத்தாறு பிரதான சாலையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
கழுகுமலை சார் பதிவாளர் அலுவலகம் முன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com