தகுதியுடைய விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடைய விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மீதும், பாரபட்சத்துடன் நடந்து கொள்ளும்

தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடைய விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மீதும், பாரபட்சத்துடன் நடந்து கொள்ளும் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்றது. சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், வேளாண்மை இணை இயக்குநர் வன்னயராஜன், தாமிரவருணி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டம் தொடங்கியதும், மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், கடம்பாக்குளத்தை தூர்வார வேண்டும், காப்பீட்டு பிரீமியத் தொகையை பெறாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முக்காணி பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், காப்பீட்டுத் திட்டத்தில் மல்லி பயிரை இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 அப்போது, பேசிய விவசாயிகள் சிலர் தகுதியான விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படுவது இல்லை என்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கடன் வழங்குவதாகவும் குற்றம்சாட்டினர்.
 இதற்கு பதிலளித்து ஆட்சியர் ம. ரவிகுமார் பேசியது;இந்த புகார்கள் குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தவறு செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புகார்கள் வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் நிதி அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும்.
உரிய தகுதிகள் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரித்தார். மேலும், மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com