தூத்துக்குடியில் கொட்டும் மழையில் 5ஆவது நாளாக போராட்டம்: அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் ஆதரவு

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தொடர்ந்து 5ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தொடர்ந்து 5ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5ஆவது நாளான சனிக்கிழமை சிறிது நேரம் மழை பெய்தபோதும், மழையை பொருட்படுத்தாமல் மாணவர், மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
மார்க்சிஸ்ட் உண்ணாவிரதம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மாநகரச் செயலர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூனன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்ததால், மாவட்டச் செயலர் அழகுமுத்து பாண்டியன் தலைமையில் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகரச் செயலர் ஞானசேகர், மாவட்ட பொருளாளர் பரமசிவன், ஏஐடியூசி மாவட்டத் தலைவர் மணி ஆச்சாரி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
வீராங்கனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: வீராங்கனை அமைப்பு சார்பில், திரேஸ்புரம் கடற்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் பேராசிரியை பாத்திமாபாபு தலைமை வகித்தார். இதில், மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். கச்சத்தீவை மீட்கவும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் வலியுறுத்தினர்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம், நாசரேத்தில் தொடர்ந்து 3 ஆவது நாளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
வர்த்தக சங்கம் சார்பில் அதன் தலைவர் கமலிபாலசிங் தலைமையிலும், வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் கல்யாண்குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் திருநாவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சதுக்கத்தில் சேனாபதி ராஜா தலைமையிலும், பேருந்து நிலையம் அருகே நகர வணிகர் சங்கத் தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம்: ஜல்லிக்கட்டு போட்டியை எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக நடத்த வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரி மாணவர், மாணவிகள் மகளிர் காவல் நிலையல் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் சங்கத்தினர் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி, ஆத்தூர் மற்றும் காயல்பட்டினத்தில் தொடர்ந்து 3ஆவது நாளாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டப் பந்தலில், மேள வாத்தியங்களுடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமும் நடைபெற்றது.
மனிதச் சங்கிலி போராட்டம்:காயல்பட்டினத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி சனிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், திரளான மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்றனர். அவ்வழியே வந்த சுற்றுலாப் பயணிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com