"விவசாயிகளுக்காக இளைஞர்கள் போராடியிருக்க வேண்டும்'

பாரம்பரியத்தைவிட வாழ்வாதாரம் முக்கியம் என்பதால், ஜல்லிக்கட்டுக்காக இல்லாமல் விவசாயிகளுக்காக இளைஞர்கள் போராடியிருக்க வேண்டும் என்றார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்

பாரம்பரியத்தைவிட வாழ்வாதாரம் முக்கியம் என்பதால், ஜல்லிக்கட்டுக்காக இல்லாமல் விவசாயிகளுக்காக இளைஞர்கள் போராடியிருக்க வேண்டும் என்றார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள குருகாட்டூரில் சனிக்கிழமை நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விவசாயப் பயிர் இழப்புக்காக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. இதற்கான கணக்கெடுப்பும் முறையாக நடைபெறவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு எடுக்கப்படாமலேயே கணக்குகள் முடிக்கப்படுகின்றன.
விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு பாசனக் குளங்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் குடும்பத்துடன் போராட முன்வர வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடியதை மாற்றத்துக்கான போராட்டத்தின் முதல் படியாக எடுத்துக் கொள்ள முடியாது.
பாரம்பரியத்தைவிட வாழ்வாதாரம் முக்கியம் என்பதால் விவசாயத்துக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் இளைஞர்களின் போராட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 6ஆம் தேதி தமிழகத்தில் மாவட்ட தலைமையிடங்களில் புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com