தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆவது நாளாக இளைஞர்கள் தொடர் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 6 ஆவது நாள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 6 ஆவது நாள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 17 ஆம் தேதி இளைஞர்கள், கல்லூரி மாணவர், மாணவிகள் போராட்டத்தை தொடங்கினர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் கடந்த 5 நாள்களாக ஆயிரக்கணக்கான மாணவர், மாணவிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டம் வேண்டும் என வலியுறுத்தி 6 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
அனைத்துப் பிரச்னைகளிலும் போராடுவோம்: போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினர். ஜல்லிக்கட்டு விவகாரம் மட்டுமேன்றி தண்ணீர் பிரச்னை, சுற்றுச்சூழல் பிரச்னை என அனைத்துப் பிரச்னைகளிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அந்தப் போராட்டங்களின்போது இதேபோல ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
திருச்செந்தூர்...
திருச்செந்தூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. வஉசி திடலில் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து அறவழிப் போராட்டம் நடத்தி வரும் கல்லூரி மாணவர்கள், 5ஆவது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது சேவல் சண்டை நடத்தி உற்சாகமாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
கோவில்பட்டியில் தீக்குளிக்க முயற்சி...
 கோவில்பட்டி பயணியர் விடுதி முன் 5ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட பந்தலில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தனியார் பள்ளி வாகன ஓட்டுநரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
5ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இரவு சுமார் 7 மணியளவில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய நிலையில் பந்தலில் ஒருவர் வந்து நின்றார். இதையடுத்து போராட்டக் குழுவினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் அவர், கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் முருகேசன் (49) என்பதும், இவர் கோவில்பட்டியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் வாகன ஓட்டுநராக இருந்து வருவதும் தெரியவந்தது.
இவர் மது அருந்திய நிலையில், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதும் தெரியவந்தது. போலீஸார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமையும் போராட்ட பந்தலில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜோதிராமலிங்கம் மகன் சுந்தரமகாலிங்கம் (26) என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com