தூத்துக்குடி அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரும், அவரது நண்பரும் திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரும், அவரது நண்பரும் திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 தூத்துக்குடி மாவட்டம் புதூர்பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (45). புதிய தமிழகம் கட்சி பிரமுகரான இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை புதூர்பாண்டியாபுரம் ஊராட்சித் தலைவராக இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட தேர்தலின்போது அத் தொகுதி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால் தனது மனைவி மஞ்சுளாவை தேர்தலில் நிறுத்தியிருந்தார். முனியசாமி- மஞ்சுளா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இரண்டு முறை ஊராட்சித் தலைவராக இருந்துவிட்டதால் அந்த பதவியை அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்கும்படி ஊர் தரப்பில் பேசப்பட்டதாம். இருப்பினும், மஞ்சுளாவை தேர்தலில் நிறுத்தியதால் அடிக்கடி இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் முனியசாமி புதூர்பாண்டியாபுரம் ஊரணி அருகேயுள்ள தனது நண்பர் முத்துக்குமாரின் (45) லாரி போக்குவரத்து நிறுவனத்தில் திங்கள்கிழமை இரவு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாரம். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திடீரென உள்ளே புகுந்து முனியசாமியையும், முத்துக்குமாரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனராம். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் புதூர்பாண்டியாபுரம் பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீமைச்சாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் புதூர்பாண்டியாபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என விசாரணை மேற்கொண்டு வரும் புதியம்புத்தூர் போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும், உறுதியான காரணம் முழு விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com