தூத்துக்குடி மாவட்டத்தில் முடிவுக்கு வந்த மாணவர்களின் போராட்டம்: வழக்குரைஞர்கள் மறியல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 6 நாள்களாக போராடி வந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் திங்கள்கிழமை தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 6 நாள்களாக போராடி வந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் திங்கள்கிழமை தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
இதற்கிடையே, சென்னையில் இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்குரைஞர்கள் மறியல் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இரவு பகலாக போராட்டம் மேற்கொண்டனர். 7 ஆவது நாளாக திங்கள்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இளைஞர்கள் சிலர் மைதானத்தில் திரண்டனர். அவர்களிடம் மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், தூத்துக்குடி புறநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி ஆகியோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அவசரச் சட்டம் குறித்து முதல்வர் தெரிவித்த கருத்துகளை போலீஸார் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்து கலைந்து சென்றனர். இதையடுத்து, மைதானத்தில் போடப்பட்டிருந்த நிழல் பந்தல்கள் அகற்றப்பட்டு. அந்த மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கல்லூரி மாணவர்கள் போராட்டம்: இதற்கிடையே, தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தர்னாவில் ஈடுபட்ட மாணவர், மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் சென்றனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் சிறிது நேரம் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.
வழக்குரைஞர்கள் மறியல்:  சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சிலர் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால், பாளையங்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, போலீஸாருக்கும், வழக்குரைஞர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதையடுத்து, வழக்குரைஞர்கள் தங்கராஜ் காந்தி, ஹரிராகவன் ஆகியோரை போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர், சிறிது நேரம் முழக்கங்களை எழுப்பிய வழக்குரைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூனன் தலைமையில் மக்கள் நலக் கூட்டியக்கத்தினர் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மார்க்சிஸ்ட் மாநகரச் செயலர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலர் அகமது இக்பால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னையில் காவல் துறையினர் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் கிழக்கு வட்டத் தலைவர் அண்ணாமலை பரமசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:  திருச்செந்தூரில் மாணவர்கள் 6-ஆவது நாளாக திங்கள்கிழமை காலை தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையறிந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. கோ.இராமராஜன், காவல் ஆய்வாளர் பெரி.லெட்சுமணன் உள்ளிட்ட காவல்துறையினர், போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர். இதைக் கேட்டு, அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கோவில்பட்டி:  கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கடந்த ஐந்து நாள்களாக கல்லூரி மாணவர், மாணவிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக வலைதள நண்பர்கள் பங்கேற்ற போராட்டம் திங்கள்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், போராட்டக் களத்தில் தொடர்ந்து இருந்து வந்த இளைஞர்களுடன் டி.எஸ்.பி. முருகவேல் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் கடந்த ஐந்து நாள்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை போராட்டப் பந்தலுக்கு வந்த ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் சுந்தரநேசன், போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறும், பந்தலை அகற்றுமாறும் போராட்டக்காரர்களைக் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்து, பந்தலையும் அகற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com