தேசிய வாக்காளர் தினம்: கோவில்பட்டியில் பேரணி

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கோவில்பட்டியில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கோவில்பட்டியில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் முன்பிருந்து தொடங்கிய இப்பேரணிக்கு, தலைமையாசிரியர் முனியசாமி தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் அப்பனசாமி, கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்த பின்னர், அங்கு கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமையில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வருவாய்த் துறை அதிகாரிகள், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையை கோட்டாட்சியர் வழங்கினார்.
விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் தலைமை வகித்து, விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கிவைத்தார்.
வட்டாட்சியர் து.செந்தூர்ராஜன், தேர்தல் துணை வட்டாட்சியர் ஞா.கோமதிசங்கர், வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகன், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்தும், நான்கு ரதவீதிகள் வழியாக பேரணியாகவும் வந்தனர். இதே போல் ஆட்டோக்கள் பேரணியும் நடைபெற்றது.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், வட்டாட்சியர் மு. நடராஜன் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் லெனின், வருவாய் ஆய்வாளர் ஜெபராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளம் தூய ஸ்தேவான் தொடக்கப் பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டு புதிய வாக்காளர்களுக்கு வட்டாட்சியர் அடையாள அட்டை வழங்கினார்.
இதில், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஸ்டான்லி, வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் ஹேமா, தமிழ்ச்செல்வி, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளம் வட்டார வள மையம் கொம்மடிக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, முத்துகிருஷ்ணாபுரம் டிடிடிஏ தொடக்கப் பள்ளி ஆகியவற்றிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உடன்குடி: உடன்குடி பேருந்து நிலையம் அருகில் புறப்பட்ட பேரணியை, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்)சாமத்துரை, வட்டாட்சியர் செந்தூர்ராஜன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) கோமதிசங்கர், தேர்தல் பிரிவு அலுவலர் சுடலை, வருவாய் ஆய்வாளர் பாரதிமீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தீசன், சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆறுமுகனேரி: ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திருச்செந்தூர் மண்டலத் துணை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் கனகரத்னம், தலைமை ஆசிரியர் விஜிலா மேரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com