குடியரசு தின விழாவில் ரூ. 1.80 கோடி நலத்திட்ட உதவி அளிப்பு

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 110 பயனாளிகளுக்கு ரூ. 1.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 110 பயனாளிகளுக்கு ரூ. 1.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் ம. ரவிகுமார் தேசியக் கொடியை ஏற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முன்னிலை வகித்தார்.
  தேசியக் கொடியை ஏற்றியபிறகு காவல்துறை சார்பில் நடைபெற்ற அணிவகுப்பை ஆட்சியர் ஏற்றுக் கொண்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திரப்போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் போன்ற வீரர்களின் வாரிசுகள் மற்றும் சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
 பின்னர், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியோருக்கு முதல்வரின் பதக்கங்களையும், நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.  
விழாவையொட்டி,  முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் மூலம் 4 நபர்களுக்கு ரூ.1.25 லட்சம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு ரூ.3.33 லட்சம், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 20 பேருக்கு தலா ரூ.48,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  இதேபோல, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 20 பேருக்கு ரூ. 93,375, வேளாண்மைத் துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ.15,050, தோட்டக்கலைத் துறையின் சார்பில்  5 பேருக்கு ரூ. 3.54 லட்சம்,  மகளிர் திட்டத்தின் மூலம் 11 பேருக்கு ரூ. 65.90 லட்சம் வழங்கப்பட்டது.
 மேலும், மாவட்ட தொழில் மையம் மூலம் 2 பேருக்கு ரூ. 5.89 லட்சம், வருவாய்த்துறை மூலம் 10 பேருக்கு ரூ. 30,000, தாட்கோ மூலம் 5 பேருக்கு ரூ. 3.13 லட்சம், புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 19 பேருக்கு ரூ. 95.69 லட்சம் என மொத்தம் 110  பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடி நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வழங்கினார்.
 மேலும்,  சிறுசேமிப்பு துறையின் சார்பில் அதிக அளவில் சாதனை புரிந்த அலுவலர்கள் மற்றும் முகவர்கள் 23 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் கேடயமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 11 பேருக்கு பதக்கங்களும், நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
  தொடர்ந்து,   தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாதெமி மேல்நிலைப் பள்ளி,  விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி பிஎம்சி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப்,  மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ராசையா,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர். ராஜகோபால், தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் மாணிக்கராஜா, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com