ஆழ்வார்திருநகரி அருகே பொதுமக்களுக்கு இடையூறு: கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள்

ஆழ்வார்திருநகரி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த 20 குரங்குகளை சனிக்கிழமை கூண்டு வைத்து வனத் துறையினர் பிடித்தனர்.

ஆழ்வார்திருநகரி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த 20 குரங்குகளை சனிக்கிழமை கூண்டு வைத்து வனத் துறையினர் பிடித்தனர்.
ஆழ்வார்திருநகரி, குரங்கணி, மாவடிப்பண்ணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான குரங்குகள் காணப்படுகின்றன. அவை வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதுடன், உணவுப் பொருள்களையும் தூக்கிச் சென்றுவிடுகின்றன. சிறுவர்கள் உள்பட பலரை குரங்குகள் கடித்து காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மாந்தோப்பு, தென்னந்தோப்புகளிலும் குரங்குகள் புகுந்து, மாங்காய், இளநீரை பறித்து சேதப்படுத்தி வந்தனவாம். இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்ததால், இந்தக் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருச்செந்தூர் வனச்சரகர் லோகசுந்தரநாதன், வனக் காப்பாளர்கள் காளிராஜன், ரத்தினம் உள்ளிட்டவர்கள் குரங்குகளைப் பிடிப்பதற்காக மாவடிப்பண்ணையில் சனிக்கிழமை 3 இடங்களில் கூண்டுகளை வைத்து, முதற்கட்டமாக 20 குரங்குகளை பிடித்தனர். அவற்றை களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொண்டு சென்று விட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து குரங்குகளை பிடிக்கும் பணியானது  இன்னும் 2 நாள்கள் நடைபெறும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com