தூத்துக்குடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

எய்ம்ஸ் மருத்துவமனையை தூத்துக்குடியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையை தூத்துக்குடியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது,  காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:
 மத்திய அரசு அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் தூத்துக்குடியில் அமைவது தான் எல்லா வகையிலும் பொருத்தமாக இருக்கும்.  ஏனெனில் இங்கு தான் தொழிலாளர்களும்,  விவசாயிகளும்,  வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும் அதிகமாக உள்ளனர்.
இதனால் தூத்துக்குடி மட்டுமன்றி தென்மாவட்ட மக்களும் பயனடைவார்கள் என்பதால் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதிச்சான்றிதழ்:  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு சார்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:
கோவில்பட்டி ராஜீவ் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் காட்டுநாயக்கன் சமூகத்தினை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளனர்.  அவர்களில் பல பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.  சான்றிதழ் வழங்க காலதாமதமாவதால், மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது.  படித்த மாணவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.  எனவே அந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனைப் பட்டா:  தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மாதா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
 மாதா நகர் கீழ் பகுதியில் 36 வீடுகள் உள்ளன.  அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு அரசு சார்பில் ஆதார் அட்டை,  குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.  மேலும் நாங்கள் வீட்டு தீர்வை மின் இணைப்பு ஆகிய அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம்.
தற்போது நாங்கள் இருக்கும் இடம் அரசு இடம் என்று கூறி, எங்களை அங்கு இருந்து காலி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு நோட்டீஸ்  வந்துள்ளது. எங்களுக்கு வேறு இடம் கிடையாது.  எனவே நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும்,  எங்களை அந்த இடத்தில் இருந்து காலி செய்ய வற்புறுத்த கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நிலத்தடிநீர் விற்பனை:  தூத்துக்குடி புதூர் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
எங்கள் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக செங்கல் சூளை உள்ளது. அங்கு கடந்த ஒரு மாதமாக ஆழ்துளைக் கிணறு அமைத்து வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 இதனால் எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com