கீதா ஜீவன் சாதிப்பாரா? சறுக்குவாரா?

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கீதா ஜீவன் எம்.எல்.ஏ. தனது செயல்பாடு மூலமாக சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கீதா ஜீவன் எம்.எல்.ஏ. தனது செயல்பாடு மூலமாக சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலராக இருந்த என்.பெரியசாமி கடந்த மாதம் 26ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவரது பதவி வாரிசுகளில் ஒருவருக்கு வழங்கப்படுமா அல்லது மாற்றுக்கட்சிகளிலிருந்து வந்தவர்களில் ஒருவருக்கு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற என்.பெரியசாமியின் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
அப்போது, தற்போதையை சட்டப்பேரவை உறுப்பினர்களான கீதா ஜீவன் (தூத்துக்குடி), அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) என இருவரில் ஒருவருக்கு பதவி வழங்கலாம் என பலர் வலியுறுத்தியதால் இருவரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு மாவட்டச் செயலராக உள்ள அ.சுப்பிரமணியன் அந்த பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டதாக அறிவித்த தலைமை, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகியவற்றை வடக்கு மாவட்டமாகவும், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகியவற்றை தெற்கு மாவட்டமாகவும் பிரித்து புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வடக்கு மாவட்ட பொறுப்பாளராக மறைந்த என்.பெரியசாமியின் மகள் கீதா ஜீவனையும், தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அனிதா ஆர். ராதாகிருஷ்ணனையும் நியமித்து திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் சனிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டார்.
அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு ஏற்கெனவே அதிமுகவில் தொடர்ந்து 8 ஆண்டுகள் மாவட்டச் செயலராக பணியாற்றியுள்ள அனுபவம் உள்ளதால் அவர் எளிதில் சமாளித்துவிடுவார் என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இதுவரை பெரியசாமியின் ஆதரவாளர்களாக இருந்து வந்தவர்களின் நிலை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது திமுக மாநில மகளிரணி துணைச் செயலராக இருந்து வரும் கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை தனது தந்தை என்.பெரியசாமியின் நிழலிலேயே வளர்ந்து வந்தவர். இப்போது தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகள் அவரது பொறுப்பில் வந்திருக்கிறது.
கீதா ஜீவன் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளதால் அவரது சகோதரரான மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகனுக்கு மாவட்டச் செயலர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஜெகனுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூறப்படுகிறது. அவர் தனது சகோதரி கீதா ஜீவனுடன் இணைந்து செயல்படுவாரா, மாட்டாரா என்பதைப் பொறுத்துத்தான் கீதா ஜீவனின் வெற்றி இருக்கும்.
மேலும், கடந்த ஆண்டு பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வந்த அ. சுப்பிரமணியன் தற்போது மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அவரிடமும், அவரது ஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் கீதா ஜீவன் எப்படி பெறப்போகிறார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஆனால், இந்த அறிவிப்பை பொறுத்தவரை திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக தூத்துக்குடியில் மாவட்டச் செயலராக பெரியசாமி இருந்ததால் அவரது மறைவுக்குப் பிறகு வாரிசுக்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தற்போது கீதா ஜீவனுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும், அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே, பிறகு மாவட்டச் செயலர் பொறுப்பை தலைமை வழங்கத் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை பொறுத்தவரை தற்போதுள்ள தூத்துக்குடி தவிர விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகள் அதிமுகவுக்கு சாதகமானவை என்பதாலும், அங்கு திமுகவுக்கு இதுவரை பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்பதாலும் கீதா ஜீவன் பல சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com