குடிநீர்க் குழாயை சீரமைக்கக் கோரி கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published on : 20th June 2017 08:52 AM | அ+அ அ- |
கோவில்பட்டி நகராட்சி கதிரேசன் கோயில் சாலையில் பழுதடைந்த நிலையில் உள்ள மோட்டார்கள் மற்றும் குழாய்களை உடனடியாக சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி நகராட்சி 28ஆவது வார்டு கதிரேசன் கோயில் சாலையில் தனியார் திருமண மண்டபத்துக்கு எதிர்புறம் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து செல்லும் குழாய்கள் உடைந்து 6 மாதங்கள் ஆகியும் தற்போது வரை சீரமைக்கப்படவில்லையாம்.
மேலும்,அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்புறம் உள்ள மோட்டார் அறையில் உள்ள மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. அதுபோல, பார்க் சாலையில் உள்ள கிணற்றில் உள்ள மோட்டார் பழுதடைந்துள்ளது. அதை சீரமைக்க பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அப் பகுதியினர் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஜோதிபாசு தலைமையில் நகரச் செயலர் முருகன் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர்.
பின்னர் போராட்டக் குழுவினருடன் வருவாய் அலுவலர் வெங்கடாசலம், இளநிலை உதவியாளர் லட்சுமி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.