வேலை கேட்டு மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியரிடம் மனு

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு மாற்றுத்திறனாளி பெண் மாரீஸ்வரி டிரை சைக்கிளில் வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு மாற்றுத்திறனாளி பெண் மாரீஸ்வரி டிரை சைக்கிளில் வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் என். வெங்கடேஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
மாற்றுத்திறனாளி பெண்:  புளியம்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை மனைவி மாரீஸ்வரி ஆட்சியரிடம் அளித்த மனு: எனக்கு இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில், திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. உதவித் தொகை மற்றும் ஊனமுற்றோருக்கான வண்டி, வேலைவாய்ப்பு ஆகியவை கேட்டு இதுவரை மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துச்செல்ல பேருந்து கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் எனது கணவரின் நண்பரது டிரை சைக்கிளை வாங்கி அதில் கூடாரம் அமைத்து வந்து மனு அளித்துள்ளோம். எனவே, ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் சாகுபடிக்கு தண்ணீர்: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் தாமிரவருணி ஆற்றில் மருதூர் அணை மேலக்கால் மற்றும்  கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் இருபோக பாசன பரப்பு நிலம் 46.107 ஏக்கர் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
  தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்ததால், கடந்த 30 ஆண்டுகளாக கார் சாகுபடி இல்லாமல் போனது. எனவே, நிகழாண்டில் கார் சாகுபடிக்காக, தென்மேற்கு பருவ காற்றால் கிடைக்கும் மழை நீரை மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைகளின் 4 கால்வாய்களின் பாசன பரப்பு நன்செய் நிலங்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையை சீரமைக்க வலியுறுத்தல்:கோவில்பட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அய்யலுசாமி அளித்த மனு; தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான கடம்பூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலை, ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றது. இதனால் ரயில்வே நிர்வாகம் தங்கள் வசதிக்காக அந்த சாலையை மறைத்து, அதற்கு பதிலாக மாற்றுப பாதை அமைத்தது.
தற்போது அமைக்கப்பட்ட அந்த மாற்றுப்பாதை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அந்த சாலையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, அதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக:மாவட்ட மதிமுக சார்பில் அளிக்கப்பட்ட மனு; தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் உயிர்காக்கும் முக்கிய பரிசோதனைகளில் ஒன்றான ஆஞ்சியோ பரிசோதனை (இருதய பரிசோதனை) போன்ற வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com