தாமிரவருணி பாசனம்: சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?

தாமிரவருணி பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ஒருபோக விளைச்சலுக்கே விவசாயிகள் போராடும் நிலையில், சிறப்பு

தாமிரவருணி பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ஒருபோக விளைச்சலுக்கே விவசாயிகள் போராடும் நிலையில், சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணியில் ஸ்ரீவைகுண்டம் அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1853ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு, 1869இல் பணிகள் தொடங்கி 31 கல் தூண்கள் மற்றும் 18 மதகுகளுடன் 1873இல் கட்டி முடிக்கப்பட்டது.
இவ்வணையில் இருந்து பிரியும் தென்கால் வாய்க்கால் மூலம் நேரடி பாசனமாக 2,697 ஏக்கரும், குளத்து பாசனத்தில் 1,0067 ஏக்கரும், மற்றொரு வாய்க்காலான வடகால் மூலம் நேரடி பாசனமாக 3,289 ஏக்கரும், குளத்து பாசனத்தில் 9,511 ஏக்கருமாக மொத்தம் 12,800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும், 1970ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையையும் தாமிரவருணிதான் பூர்த்தி செய்துவருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் வழியாக இருளப்பபுரம் குளத்துக்குத் தண்ணீரை கொண்டுசென்று, அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டது.
நாளடைவில், வணிக நிறுவனங்களின் தண்ணீர் தேவை அதிகரித்ததால் 2011ஆம் ஆண்டு முதல் 20 எம்.ஜி.டி திட்டத்தின் மூலம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நேரடியாக ராட்சத இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயத்துக்குப்போக எஞ்சிய நீரையே தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாததால், நீராதாரம் குறைந்து இப்பகுதியில் ஒரு போக சாகுபடிக்குக் கூட போராடித்தான் தண்ணீரைப் பெறும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
பராமரிப்பு இல்லை:  இந்நிலையில், பொதுப்பணித்துறையினரின் முறையான பராமரிப்பு இல்லாததால் அணை மட்டுமன்றி அணையில் இருந்து பிரியும் வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால்களும் அமலைச் செடிகள் மண்டியும், தூர்ந்த நிலையிலும் காணப்படுகின்றன.
மேலும், 53 பாசன குளங்களும் தூர்ந்து தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் அணை 2015இல் தூர்வாரும் பணி நடைபெற்றபோதும், முறைகேடு பிரச்னையால் பணி முழுமையடையாமல் அணையின் முழு கொள்ளளவான 8 அடிக்கு தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை.
வீணாகும் நீர்: இதனால் மழைக் காலங்களில் அணையிலிருந்து தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதையும் தடுக்க முடியவில்லை. அணையின் மதகுகள் பழுதாலும் தண்ணீர் வீணாகிறது. மணல் பெருமளவுக்கு எடுக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் இயற்கை முறையில் சுத்திகரிக்கப்படாமல், பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் தங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.    
எனவே, கோடைக்காலத்துக்குள் பத்மநாபமங்கலம் மேல குளம், கீழக்குளம், பட்டர் குளம், செந்திலாம்பண்ணை குளம் உள்ளிட்ட 35 பாசனக் குளங்களையும், வாய்க்கால்களையும் தூர்வாரி, அவற்றின் மடைகளையும் பழுது நீக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com