துறைமுகத்தில் சரக்கு சேவை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு சேவைக் கட்டணத்தை குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச. ஆனந்த சந்திரபோஸ்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு சேவைக் கட்டணத்தை குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச. ஆனந்த சந்திரபோஸ்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி கிளை சார்பில், தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சரக்கு கையாளுதல் குறித்த மாநாட்டை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு கையாளும் வசதியை அதிகரிக்கும் வகையில் ரூ. 2 ஆயிரம் கோடியில், 12.8 மீட்டர் முதல் 14.5 மீட்டர் வரை ஆழப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று கிடைத்தவுடன் விரைந்து செயல்படுத்தப்படும்.
துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்கும் வகையிலும், சரக்கு சேவைக் கட்டணத்தை குறைக்கும் வகையிலும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சரக்கு லாரிகள் நிறுத்தவும், ஓட்டுநர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் என். சுப்பிரமணியன் பேசியதாவது: விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான 600 ஏக்கர் நிலத்தில் இதுவரை 410 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 190 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
 இந்தப் பணிகள் முடிவடைந்ததும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்றார்.
மாநாட்டில், இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் தமிழக கிளை துணைத் தலைவர் எம். பொன்னுசாமி, தூத்துக்குடி கிளைத் தலைவர் முருகேஸ்வரன், துணைத் தலைவர் சஞ்சய் குணசிங், முன்னாள் தலைவர் எட்வின் சாமுவேல் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com