ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: ஆலையை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரஸார் கைது: தூத்துக்குடி மாதா கோயில் வளாகத்தில் கருப்புக் கொடி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி பலர் தர்னாவில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஆலையை முற்றுகையிட முயன்றதாக இளைஞர் காங்கிரஸை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த ஆலையை மூடவும், ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகர், புறநகர் பகுதியில் 15 இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி பனிமய மாதா பேராலய வளாகத்தில் அமர்ந்து ஆலயத்தை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டம் தொடங்கினர். ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் ஆர்தர் தலைமை வகித்தார்.  ஆலய வளாகத்தில் அவர்கள் கருப்புக் கொடி ஏற்றியிருந்தனர்.
வாகனப் பேரணிக்கு தடை:  ஸ்டெர்லைட் போராட்டக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே கூடி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்லத் திட்டமிட்டனர். இதையடுத்து, பேரணிக்கு அனுமதி கிடையாது என தெரிவித்த தென்பாகம் போலீஸார் அங்கு கூடியிருந்தோரைக் கலைந்து செல்ல அறிவுறுத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இளைஞர் காங்கிரஸார் கைது: இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலர் சகாயராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் வின்ஸ் எலிஜின், செயலர்கள் ரெனிக்ஸ் வினோ, ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை சிப்காட் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com