மாணவர்களின் பயணம் பாரதி வழியில் இருக்க வேண்டும்: சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பாஸ்கர்

பாரதி வழியில் மாணவர்கள் பயணம் செய்ய வேண்டும் என்றார் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர்.

பாரதி வழியில் மாணவர்கள் பயணம் செய்ய வேண்டும் என்றார் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர்.
சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறை சார்பில் எட்டயபுரத்தில் பாரதி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாரதி மணிமண்டப வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் தலைமை வகித்தார். தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் அ. ராமசாமி முன்னிலை வகித்தார். தமிழியல் துறை உதவிப் பேராசிரியர் த.க.ஜாஸ்மின் சுதா வரவேற்புரையாற்றினார்.
விழாவில் பாரதி குறித்த கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பேசியது:
பாரதி ஒரு பண்பட்ட தேசிய கவிஞர். அவர் தமிழுக்கு மட்டுமன்றி இந்த தேசத்துக்கான கவிஞர். அந்தக் காலகட்டத்திலே பல நகரங்களுக்குச் சென்று பல தலைவர்களைச் சந்தித்து, தன் பாடல்கள் மூலமாகவும், பேச்சு மூலமாகவும் மக்களுக்கு சுதந்திர தாகத்தை உருவாக்கி எழுச்சியை உண்டாக்கிய தேசிய கவி பாரதி. பெண்களை புறந்தள்ளி வைத்திருந்த காலத்தில் பெண்ணியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்ணியம் சார்ந்த பல பாடல்களை இயற்றி, பெண்தான் சக்தி என்று கூறியவர்.
தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் அந்தச் சமுதாயம் வளர்ந்த பண்பட்ட நாகரிக சமுதாயமாக இருக்க முடியாது என கர்ஜித்தவர். இத்தகைய சிறப்புமிக்க தேசிய கவிஞர் பிறந்த ஊரில், சுந்தரனார் பல்கலைக்கழகம் இங்குள்ள மக்களுடன் சேர்ந்து பாரதி ஆவணக் காப்பகத்தை உருவாக்கி அவருடைய நூல்களை இங்கு வைத்து மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தி கொண்டிருக்கிறது.
பல கல்லூரி மாணவர்களை ஒன்றாக இணைத்து, பாரதி குறித்த கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை இங்கேயே நடத்தி இந்த இடமே ஒரு திருவிழா போல் நடத்திட வேண்டும். அதற்கான செலவினங்களை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்ளும்.
பாரதி சொன்ன நற்பண்புகள், நற்செய்திகள் அனைத்தையும் எல்லா இடங்களுக்கும் கொண்டு போய் சேர்க்கும் விதத்தில் உழைக்க வேண்டும்.
மாணவர்கள் பாரதி சொன்ன வழியில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்து பயணித்து, ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து பாரதி என்னும் மகாகவி என்ற தலைப்பில் பேராசிரியர் அ. ராமசாமி, நெல்லையும் பாரதியும் என்ற தலைப்பில் எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் ஆகியோர் உரையாற்றினர். கல்லூரி மாணவர்களின் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், பாரதி ஆய்வாளர் இளசை மணியன்,  கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அமலஜெயராயன், நாகலாபுரம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் யோ. தர்மராஜன், கல்லூரி பேராசிரியர்கள் பேச்சியம்மாள், விவேகலதா, முனியசாமி, அசோக்குமார், தெய்வ ரத்தினம், பாலசுப்பிரமணியன், பாரதி அன்பர்கள் மாலதி, கென்னடி, முத்துராமலிங்கம், ஜெயக்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com