சாம்பல் புதன் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்

சாம்பல் புதன் நாளையொட்டி கோவில்பட்டியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் புதன்கிழமை நடைபெற்றன. 

கோவில்பட்டியில்...
சாம்பல் புதன் நாளையொட்டி கோவில்பட்டியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் புதன்கிழமை நடைபெற்றன. 
கோவில்பட்டி புனித வளனார் ஆலய வளாகத்தில் ஆலயப் பங்குத்தந்தை பீட்டர் அடிகளார்,  உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். பின்னர் அவர்கள் இறைமக்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவையிட்டனர். தவக்கால நாள்களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் சிலுவைப் பாதையைத் தொடர்ந்து திருப்பலி நடைபெறுகிறது.

சாத்தான்குளம் பகுதியில்...
நாசரேத் புனித யோவான் பேராலயத்தில் தலைமை பாதிரியார் எட்வின் ஜெபராஜ் தலைமையில்,  உதவி பாதிரியார் தனசிங் முன்னிலையிலும், வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் மூக்குப்பீறி சேகர குரு ஜெரேமியா தலைமையில், உபதேசியார் ஜான் முன்னிலையிலும்,  பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு அல்பர்ட் தலைமையில், சபை ஊழியர் கோயில்ராஜ் முன்னிலையிலும்,  மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் குரு ஜெரேமியா தலைமையிலும்,  பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை கத்தோலிலிக்க தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையிலும், பிள்ளையன்மனை ஆலயத்தில் சேகரகுரு ஜேஸ்பர் அற்புதராஜ் தலைமையிலும் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனைகளுடன் தவக்காலம் தொடங்கியது. 
சாத்தான்குளம் தூய தேவான் ஆலயத்தில் சேகரகுரு பாஸ்கர் அல்பர்ட்ராஜன்  தலைமையிலும்,  புனித மரியாளின் மாசற்ற திருஇருதய மாதா தேவாலயத்தில் முதன்மை பங்குத்தந்தை தலைமையிலும்,  பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலயத்தில் திருத்தல அதிபர் தலைமையிலும், சொக்கன்குடியிருப்பு அதிசயமணல் மாதா ஆலயத்தில் திருத்தல அதிபர் தலைமையிலும்,  சிதம்பராபுரம் ஆலயத்தில் பங்குத்தந்தை பபிஸ்டன் தலைமையிலும் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றன.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில்...
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் குருசு கோயிலிலில் புதன்கிழமை தொடங்கியது.
இதைமுன்னிட்டு காலை 6.15 மணிக்கு பங்குத்தந்தை மரியவளன் திருப்பலிலி நிறைவேற்றினார். தொடர்ந்து அவர் சாம்பலை பக்தர்கள் நெற்றியில் பூசினார். தவக்காலத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெறுகிறது.  

ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில்
ஆறுமுகனேரி,  ஆத்தூர், காயல்பட்டினம் பகுதி தேவாலயங்களில் சாம்பல் புதன் விழா நடைபெற்றது.
ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார், சுகந்தன் அடிகளார் ஆகியோர் சாம்பல் பூசினர். 
காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை மரிய ஜான் அடிகளார் நடத்தி வைத்தார். மேலும், ஆத்தூர் பகுதியில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

ஆறுமுகனேரி கோயிலில்
திருவிளக்கு பூஜை, அன்னதானம்
ஆறுமுகனேரி, பிப். 14: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆறுமுகனேரி காமராஜர் பூங்காவில் அமைந்துள்ள அருள்மிகு வீரசக்கம்மாள் பூமீஸ்வரர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
இதையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இரவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
இதில், நகர்நல மன்றத் தலைவர் பி.பூபால்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். புதன்கிழமை நண்பகலில் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி பி.முருகன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com