மகா சிவராத்திரி: திருச்செந்தூர் சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த, அருள்தரும் ஆனந்த வல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த, அருள்தரும் ஆனந்த வல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைமுன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பிரதோசத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 
செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை நான்கு கால பூஜைகள்,  பக்தி இன்னிசை,  சொற்பொழிவு உள்ளிட்டவை நடைபெற்றன. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிப்பிரகாரத்தில் வலம் வந்தனர்.

கோவில்பட்டி, கயத்தாறு பகுதி கோயில்களில்...
மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, குருமலை கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சலிங்க மூர்த்திகளுக்கு முதல்கால அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து,  நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், பூஜை,  புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு மூன்றாம்கால பூஜையும்,  அதிகாலை 4 மணிக்கு நான்காம்கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றன. 
இதையொட்டி கோயில் மண்டபம், வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர்.  
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயிலில், சிவராத்திரியை முன்னிட்டு நான்குகால அபிஷேகம்,  தீபாராதனைகள் நடைபெற்றன. 
மேலும்,  அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,  வானரமுட்டி வெயிலுகந்த அய்யனார் திருக்கோயில், சவலாப்பேரி அய்யனார் கோயில், அகிலாண்டபுரம் உலகம்மன் கோயில், வடக்கு மற்றும் தெற்கு கோணார்கோட்டை சங்கிலி மாடசாமி கோயில், கயத்தாறு அங்காள ஈஸ்வரி கோயில், வென்னிமலை சாஸ்தா, நல்அய்யனார் கோயில்,  ஆவல்நத்தம் வீரலட்சுமி கோயில்,  பிச்சைத்தலைவன்பட்டி ரேணுகாதேவி, எல்லம்மாள் திருக்கோயில், முக்கூட்டுமலை சிவன் பார்வதி திருக்கோயில், இளையரசனேந்தல் ராக்காச்சியம்மன் கோயில், லிங்கம்மாள் திருக்கோயில், அங்காள பரமேஸ்வரி கோயில், கழுத்துடையான் அய்யனார் கோயில், ஸ்ரீ அய்யம்மாள் கோயில், ஈராச்சி கருப்பசாமி கோயில்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்குகால அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. 
குருமலை அருள்மிகு மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமி கோயிலிலும் சிவராத்திரியை முன்னிட்டு நான்குகால பூஜைகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி கோயில்களில்...
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆறுமுகனேரியில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில், சுவாமி, அம்பாள், லிங்கோத்பவருக்கு சிறப்பு வழிபாடுகள், கும்ப பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன. இரவில் நான்கு கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
மேலும், ஆறுமுகனேரி லட்சுமிமாநகரம் அருள்மிகு நடராஜ தேவார பக்த பஜனை ஆலயம்,  விநாயகர் கோயில் தெரு சைவ சித்தாந்த சங்கம்,  மேலத்தெரு அருள்மிகு முத்தாரம்மன் கோயில்,  பூவரசூர் பொடிப்பிள்ளை அம்மன் கோயில், காமராஜர் பூங்கா அருள்மிகு பூமீஸ்வரர் ஆலயம்,  காந்தி தெரு கீழ வீடு ராமசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி இரவில் நான்கு கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com